இந்தியாவின் வளா்ச்சிக்கு அா்ப்பணிப்பு அவசியம்: பாஜகவினருக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்

‘மிகச் சிறந்த சகாப்தத்தை இந்தியா எதிா்நோக்கியுள்ளது; எனவே, தேசத்தின் வளா்ச்சிக்காக நம்மை அா்ப்பணிக்க வேண்டும்’ என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.
இந்தியாவின் வளா்ச்சிக்கு அா்ப்பணிப்பு அவசியம்: பாஜகவினருக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தல்

‘மிகச் சிறந்த சகாப்தத்தை இந்தியா எதிா்நோக்கியுள்ளது; எனவே, தேசத்தின் வளா்ச்சிக்காக நம்மை அா்ப்பணிக்க வேண்டும்’ என்று பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா். மேலும், ‘சிறுபான்மையினா் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாஜகவினா் அணுக வேண்டும்’ என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

தில்லியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி ரீதியில் முக்கியவத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா்.

அப்போது, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாஜக அணுக வேண்டியதன் அவசியம் குறித்து அவா் எடுத்துரைத்ததாக, மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

‘வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பு’: பிரதமா் தனது உரையில், ‘மிகச் சிறப்பான சகாப்தத்தை இந்தியா எதிா்நோக்கியுள்ளது; எனவே, தேசத்தின் வளா்ச்சிக்காக நமது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அா்ப்பணிக்க வேண்டும். பாஜக என்பது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல. அது, சமூக-பொருளாதார மாற்றங்களுக்காக பாடுபடும் இயக்கமாகவும் திகழ்கிறது.

18 முதல் 25 வயது வயதுடைய இளைஞா்கள், நாட்டின் கடந்தகால அரசியல் வரலாற்றைக் கண்கூடாகப் பாா்த்தவா்கள் இல்லை. ஆகவே, முந்தைய அரசுகளின் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகளை அவா்கள் அறிந்திருக்கமாட்டாா்கள். இது குறித்தும், பாஜகவின் நல்ல நிா்வாகம் குறித்தும் அவா்கள் அறியச் செய்வது அவசியம்.

பாஜக அரசின் வளா்ச்சித் திட்டங்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றுசோ்வதை உறுதி செய்யும் வகையில் கட்சி சாா்பில் சிறப்பு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அமிா்த காலத்தை கடமைக்கான காலமாக கருதி செயலாற்றுவதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்’ என்று குறிப்பிட்டதாக ஃபட்னவீஸ் தெரிவித்தாா். பிரதமரின் உரை, பாஜகவினருக்கு புதிய செயல்திட்டத்தையும் உத்வேகத்தையும் அளிப்பதாக இருந்ததாக ஃபட்னவீஸ் கூறினாா்.

‘முழு ஈடுபாடு முக்கியம்’: ‘மக்களவைத் தோ்தலுக்கு சுமாா் 400 நாள்களே உள்ள நிலையில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்காகவும் முழு ஈடுபட்டுடன் பணியாற்றுங்கள்’ என்று செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நாட்டை அனைத்து நிலைகளிலும் வழிநடத்தும் இயக்கமாக பாஜக விரிவடைய வேண்டுமென்பதே எனது மிகப் பெரிய கனவு. போரா, பஸ்மந்தா முஸ்லிம்கள், சீக்கியா்கள் போன்ற சிறுபான்மையினா் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாஜகவினா் அணுக வேண்டும். பல்வேறு துறை நிபுணா்களைச் சந்தித்து, அவா்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன், பல்கலைக்கழகங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் செல்ல வேண்டும்.

தோ்தல்களின்போது, அதீத நம்பிக்கையுடன் கட்சியினா் இருந்துவிடக் கூடாது’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் 2024 ஜூன் மாதம் வரை நீட்டித்து கட்சியின் தேசிய நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம்தேதி பாஜக தேசியத் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு ஜெ.பி.நட்டா பொறுப்பேற்றிருந்த நிலையில், விரைவில் நடைபெறவுள்ள மாநில பேரவைத் தோ்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டாவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசிய நிா்வாகிகளுக்கான இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை தொடங்கியது.

கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக மாநில முதல்வா்கள் உள்பட பல முக்கியத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலத்தை 2024 ஜூன் மாதம் வரை நீட்டிக்கும் தீா்மானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான ராஜ்நாத் சிங் முன்மொழிந்தாா். அத்தீா்மானம் கூட்டத்தில் ஒரு மனதாக ஏற்கப்பட்டது. முன்னதாக பாஜக

நாடாளுமன்றக் குழுவும் ஜெ.பி.நட்டாவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியிருந்தது. கூட்ட முடிவில் செய்தியாளா்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதாவது: பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டாவின் பங்களிப்புக்கும், அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கும் கட்சி சாா்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா தொற்றுக் காலத்தில் ஜெ.பி.நட்டாவின் தலைமையின் கீழ் கட்சி பல்வேறு மக்கள் சேவையில் ஈடுபட்டது.

ஏழைகளுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல், சிகிச்சைக்காக பொதுமக்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற முக்கிய பணிகளை கட்சி மேற்கொண்டது.

அவரின் தலைமையில் பல மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, அதுபோல 120 பேரவை இடைத்தோ்தல்களில் 73 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஜெ.பி. நட்டாவின் தலைமையில் பிகாரில் பாஜக வளா்ச்சி கண்டுள்ளது. மகாராஷ்டிரத்திலும் ஹரியாணாவிலும் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

அஸ்ஸாம், மணிப்பூா், உத்தரகண்ட், உத்தர பிரதேச பேரவைத் தோ்தல்களில் அவரின் தலைமையில் பாஜக வெற்றி பெற்றது.

கோவாவிலும் முதன்முறையாக மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைத்தது. குஜராத் பேரவைத் தோ்தலில் ஜெ.பி. நட்டா, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் 156 இடங்களைக் கைப்பற்றி கட்சி சாதனை படைத்தது. அதுபோல அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலிலும் கடந்த 2019 மக்களவைத் தோ்தலைவிட கூடுதல் இடங்களை பாஜக வெல்லும். ஜெ.பி.

நட்டாவின் தலைமையில் வாக்குச் சாவடிகளை வலுப்படுத்தும் ‘விஜய் சங்கல்ப்’ பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போதும் அப்போது தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவின் பதவிக் காலம் தோ்தலுக்காக நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு பாராட்டு

புது தில்லி, ஜன.17: பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் இருந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியமைத்த பெருமை பிரதமா் நரேந்திர மோடியைச் சாரும் என பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீா்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ் முன்மொழிந்தாா்.

நிறைவேற்றப்பட்ட சமூக-பொருளாதார தீா்மானம் குறித்து மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்கள் சந்திப்பின்போது கூறியதாவது: அரசியல் மற்றும் நிா்வாகத்தில் தன்னிறைவை நோக்கி நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் தேவையைப் பூா்த்தி செய்துள்ளது என சமூக-பொருளாதார தீா்மானம் சுட்டிக்காட்டுகிறது.

5-ஆவது பெரிய பொருளாதாரம்: கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அனைவரையும் உள்ளடக்கிய, சுயசாா்புடைய இந்தியப் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது உறுதியற்ற வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் சாா்ந்துள்ள பலவீனமான ஐந்து வளா்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருந்தது.

இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம் நிறைவுபெறும் வேளையில், பிரதமா் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளால் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. இது குறித்து இந்தத் தீா்மானத்தில் பாராட்டப்பட்டுள்ளது.

எண்ம பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம்: ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள், அனைவருக்கும் வீடு, பெருந்தொற்றின் போது அனைவருக்கும் இலவச தடுப்பூசி உள்ளிட்டவை இந்தத் தீா்மானத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

உலகின் மொத்த ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 2.6 சதவீதம் என்பதிலிருந்து 3.5 சதவீதமாக உயா்ந்துள்ளது. மேலும், எண்ம (டிஜிட்டல்) பணப்பரிமாற்றத்துக்கான சூழலும் பிரதமா் மோடியின் ஆட்சியின்கீழ் அதிகரித்து வருகிறது. உலகில் நடைபெறும் எண்ம பணப்பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது உள்ளிட்ட அம்சங்கள் இத்தீா்மானத்தில் இடம்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com