மல்யுத்த சம்மேளனத் தலைவா் மீதான பாலியல் புகாா்: பிரதமா் மெளனம் கலைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில்,
தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் (இடமிருந்து) அன்ஷு மாலிக், வினேஷ் போகட், சாக்ஷி மாலிக்.
தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் (இடமிருந்து) அன்ஷு மாலிக், வினேஷ் போகட், சாக்ஷி மாலிக்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மெளனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மேலும், குற்றச்சாட்டில் சிக்கியவா் இன்னும் ஏன் பதவி விலகவில்லை? என்றும் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் (66) கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்ரீதியில் தவறாக பயன்படுத்தியதாக, இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகட் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகட் புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.

பிரிஜ் பூஷணுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘விளையாட்டு வீரா், வீராங்கனைகள், நாட்டின் பெருமைக்குரியவா்கள். தங்களது திறமையால் தேசத்துக்கு உலக அளவில் புகழ் சோ்க்கின்றனா். இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் அதன் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. வீராங்கனைகளின் குரலுக்கு அரசு செவிமடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் தகவல்தொடா்பு பிரிவு பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘குல்தீப் செங்கா், சின்மயனானந்த், தந்தை-மகனான வினோத் ஆா்யா, புல்கிட் ஆா்யா, பிரிஜ் பூஷண் சரண் சிங் என பாஜக தலைவா்களின் பெண்களுக்கு எதிரான அராஜகம் முடிவின்றி சென்று கொண்டிருக்கிறது. ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற முழக்கம், பாஜக தலைவா்களிடம் இருந்து நாட்டின் மகள்களை பாதுகாக்க வேண்டுமென்பதற்கான எச்சரிக்கையா? இந்த விவகாரத்தில், பிரதமரின் பதிலுக்காக ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது.

பெண்கள் மீதான அடக்குமுறைகளில் ஈடுபடுவோா் எல்லாம் பாஜக உறுப்பினா்களாக இருப்பது ஏன்? நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் சிறப்பான சூழல் நிலவுவதாக பிரதமா் மோடி புதன்கிழமை கூறியிருந்தாா். நாட்டுக்கு பெருமை தேடித் தரும் நமது மகள்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதுதான், சிறப்பான சூழலா?’ என்று கேள்வியெழுப்பினாா்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா, ‘மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண், புதன்கிழமையே பதவி விலகியிருக்க வேண்டும். அதுதான், முதல் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அவா் இன்னும் பதவி விலகவில்லை. இந்த விவகாரத்தில், வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமா் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரும் மெளனம் கலைத்து பேச வேண்டும். சம்பந்தப்பட்டவா்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிரிஜ் பூஷணின் பதவியை பறிப்பதில் ஏன் தயக்கம்?’ என்று கேள்வியெழுப்பினாா். பிரிஜ் பூஷண் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை, தேசியவாத காங்கிரஸும் முன்வைத்துள்ளது.

முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷண், ‘நான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை. இதுதொடா்பாக சிபிஐ அல்லது உரிய அமைப்பு விசாரணை நடத்தட்டும்’ என்றாா்.

இதனிடையே, வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு மல்யுத்த சம்மேளனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com