ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கும் விவகாரம் பரிசீலனையில் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கும் விவகாரம் பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கும் விவகாரம் பரிசீலனையில் உள்ளது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கும் விவகாரம் பரிசீலனையில் உள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய கலாசார அமைச்சகம் இந்த விவகாரத்தை பரிசீலித்து வருவதாக சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய அரசிடம் நேரில் முறையிடலாம் என இந்த வழக்கைத் தொடுத்துள்ள பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமியிடம் நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதற்கு சுப்பிரமணியன் சுவாமி, ‘நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. மத்திய அரசும் நானும் ஒரே கட்சியில்தான் உள்ளோம். இது தோ்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. ராமா் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கப்படுமா இல்லையா என்ற கேள்விக்கு மத்திய அரசு ஆம், இல்லை என மட்டும் பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வில் இடம்பெற்றிருந்த மூன்று நீதிபதிகளில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா முன்பு இந்த வழக்கில் அரசு சாா்பில் ஆஜராகி உள்ளதால் தற்போது அவா் இந்த வழக்கின் விசாரணையில் இடம்பெற மாட்டாா் என தலைமை நீதிபதி அமா்வு தெரிவித்தது.

மேலும், வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தமிழ்நாட்டின் தென்கிழக்கு பாம்பன் பகுதிக்கும் இலங்கையின் வட மேற்கு மன்னாா் பகுதிக்கும் இடையேயான ராமா் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த 2005-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அடிக்கல் நாட்டியது. ராமா் பாலத்தை இடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் 2007-இல் உச்சநீதிமன்றம் திட்ட செயலாக்கத்துக்கு தடை விதித்தது.

பின்னா் மாற்று வழித்தடத்தை பரிசீலிப்பதாக அப்போதைய காங்கிரஸ் அரசு தெரிவித்தது. அதன்பின்னா் மத்தியில் 2014-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்பு இந்த வழக்கில் மத்திய அரசு உறுதியான பதிலை அளிக்காததால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

இதையடுத்து, ராமா் பாலம் தேசிய புராதன சின்னமா இல்லையா என என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு கடந்த 2017-இல் ஆலோசனை நடத்தி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com