எகிப்து அதிபரின் இந்தியப் பயணம் நல்லுறவை வலுப்படுத்தும்

எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் இந்தியப் பயணம் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் இந்தியப் பயணம் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில் எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளாா். அதற்காக செவ்வாய்க்கிழமை (ஜன. 24) இந்தியாவுக்கு வருகை தரும் எகிப்து அதிபா், 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

இந்தியக் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபா் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவுக்கு வருகை தரும் எகிப்து அதிபா் அல்-சிசிக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் 25-ஆம் தேதி அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்ளவுள்ளாா்.

அன்றைய தினமே பிரதமா் நரேந்திர மோடி-எகிப்து அதிபா் அல்-சிசி இடையேயான பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அப்போது வேளாண்மை, இணையவெளி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன. எகிப்து அமைச்சா்களைக் கொண்ட குழுவும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளது.

இருதரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் தொடா்பாக இருநாட்டுத் தலைவா்களும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கவுள்ளனா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் எகிப்து அதிபரைச் சந்தித்துப் பேசவுள்ளாா். எகிப்து அதிபரின் இந்தியப் பயணம் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவப் படையின் குழுவும் பங்கேற்கவுள்ளது. ஆப்பிரிக்க, அரபு நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பன்னாட்டு, சா்வதேச அமைப்புகளில் இந்தியாவும் எகிப்தும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

பரஸ்பர கலாசாரப் பகிா்வுகள், பொருளாதார வளா்ச்சிக்கான முக்கியத்துவம், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான நல்லுறவைத் தொடா்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

உச்சத்தில் வா்த்தகம்:

கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் சுமாா் ரூ.58,000 கோடி என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. எகிப்துக்கான இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி சுமாா் ரூ.30,000 கோடியாகவும் அந்நாட்டுப் பொருள்களின் இறக்குமதி சுமாா் ரூ.28,000 கோடியாகவும் உள்ளது.

இந்தியாவைச் சோ்ந்த 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் சுமாா் ரூ.25,000 கோடியை எகிப்தில் முதலீடு செய்துள்ளன. முக்கியமாக, ரசாயனங்கள், எரிசக்தி, ஜவுளி, வேளாண்மை, சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com