தமிழக கடல் பகுதியில் சுருக்கு மடி வலையை பயன்படுத்த நிபந்தனையுடன் அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பிராந்திய எல்லைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பிராந்திய எல்லைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
 தமிழகக் கடல் பகுதியில் (12 நாட்டிகல் மைல் அல்லது கடற்கரையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரம்) சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பிடிப்பதற்கு தமிழக அரசின் மீன் வளத் துறை தடை வித்திருந்தது.
 இந்த உத்தரவை எதிர்த்து தாக்கலான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2019, பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
 இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகர், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று, ஃபிஷர்மேன் கேர் அமைப்பின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த விவகாரத்தில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அறிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசின் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
 இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
 சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி தங்கள் பிராந்திய கடல் பகுதியில் மீன்பிடிக்க குஜராத், கேரளா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா, கோவா மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில கடலோர மாநிலங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.
 இந்தத் தடையை தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் விதித்துள்ளன. ஆகவே, கடலோர மாநிலங்கள் இந்தப் பிரச்னையில் பிரிந்துள்ளன.
 பிராந்திய கடல் எல்லைக்கு அப்பால் மீன்பிடிப்பதைப் பொருத்தவரை பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் இந்த முறை மீன்பிடிப்புக்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
 இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் தேவை உள்ளது என்பது உச்சநீதிமன்றத்தின் முதன்மையான கருத்தாகும்.
 இதனால், கப்பலைக் கண்டறியும் கருவி (விடிஎஸ்) பொருத்தப்பட்டதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட படகுகளுக்கு மட்டுமே மீன்வளத் துறை அனுமதி அளிக்க வேண்டும். இந்த படகுகள் வாரத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் மட்டுமே இருமுறை மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
 சுருக்கு மடி வலையைப் பயன்டுத்த அனுமதி வழங்கப்படும் கப்பல்கள் காலை 8 மணிக்கு அல்லது அதற்குப் பிறகு கடற்கரையிலிருந்து புறப்பட்டு சென்று, அதே நாளில் மாலை 6 மணிக்குள் அதற்குரிய இடத்திற்குத் திரும்ப வேண்டும்.
 அனைத்து மாலுமிகளும் தங்களுடைய பயோமெட்ரிக் அட்டை அல்லது புகைப்பட அடையாள அட்டையை தங்களிடம் வைத்திருப்பது கட்டாயமாகும். மீன்வளத் துறை, கடல்சார் காவல் துறை, கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு விடிஎஸ் குறியீட்டை அவர்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.
 மாநிலத்தின் மீன்வளத் துறையும் இந்த நோக்கங்களுக்காக இந்த சுருக்குமடி மீன்பிடி படகுகளுக்கு வண்ணக் குறியீட்டை வழங்க வேண்டும். கப்பல்களின் பதிவு எண் படகில் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் இந்தக் கப்பல்கள் மாநிலத்தின் கடல் எல்லைக்கு வெளியில் மட்டுமே மீன்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய, ஒவ்வொரு கப்பலின் ஒவ்வொரு பயணத்திற்கும் கண்காணிப்புத் தரவுகள் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர், மீன்வளத்துறை அல்லது வேறு நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் கப்பல்கள் கரைக்கு வந்த பிறகு அன்றைய தினமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com