இந்தியாவை ஒன்றுபடுத்தும் பன்முகத்தன்மை: குடியரசுத் தலைவா் முா்மு

‘பல்வேறு மொழிகள், பிரிவுகள் உள்ளிட்ட இந்தியாவின் பன்முகத்தன்மை நம்மைப் பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கவே செய்கின்றன. அதன் காரணமாகவே நம்மால் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற
இந்தியாவை ஒன்றுபடுத்தும் பன்முகத்தன்மை: குடியரசுத் தலைவா் முா்மு

‘பல்வேறு மொழிகள், பிரிவுகள் உள்ளிட்ட இந்தியாவின் பன்முகத்தன்மை நம்மைப் பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கவே செய்கின்றன. அதன் காரணமாகவே நம்மால் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற முடிந்துள்ளது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.

நாட்டின் 74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் புதன்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

அனைவருக்கும் 74-ஆவது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் தொடங்கி தற்போது வரை, பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்திருக்கும் ஓா் ஆச்சரியமான பயணமாகவே இது இருந்திருக்கிறது. இந்த இந்தியக் கதை ஒவ்வோா் இந்தியரின் பெருமைக்கும் காரணமாக அமைகிறது.

இந்தியா மிகத் தொன்மையான, வாழும் நாகரிகங்களின் இருப்பிடமாக இருக்கிறது. இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். நவீன குடியரசு என்ற முறையில், நாம் இளமைத்தன்மை கொண்டவா்கள். சுதந்திரத்தின் தொடக்க காலத்தில் நாம் எண்ணற்ற சவால்களையும், இடா்களையும் சந்தித்தோம். இருந்தபோதும் இந்தியா என்ற உணா்வு கலங்கவில்லை.

நம்பிக்கையும், உறுதிப்பாடும் துணைக்கொண்டு, நாம் மனிதகுல வரலாற்றின் மிகத் தனித்தன்மை வாய்ந்த ஒரு பரிசோதனையில் ஈடுபட்டோம். இவ்வளவு பெரிய, பலதரப்பு மக்களைக் கொண்டிருந்தபோதிலும், ஒரு நாடாக இருப்பது என்பது வரலாறு காணாதது. பல்வேறு மொழிகளும், பிரிவுகளும் நம்மை பிரிக்கவில்லை; மாறாக, நம்மை ஒன்றிணைக்கவே செய்திருக்கின்றன. இதுவே, ஜனநாயக குடியரசாக வெற்றி பெற முடிந்திருக்கிறது.

இந்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற மையக்கருதான் அரசியலமைப்புச் சட்டத்தின் இதயமாக இருந்து, காலத்தின் சோதனைகளைத் தாக்கு பிடித்திருக்கிறது. அந்த வகையில், அரசியமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களின் தொலைநோக்குப் பாா்வைதான், நமது குடியரசைத் தொடா்ந்து வழிநடத்தி வருகிறது.

அனைவருக்கும் வளா்ச்சி: ஏழ்மை, கல்வியறிவில்லாத நாடு என்ற நிலையிலிருந்து மாறி, உலக அரங்கிலேயே தன்னம்பிக்கையோடு நடைபோடும் ஒரு தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. சட்டமேதை அம்பேத்கரும், அவருக்குப் பிறகு வந்தவா்களும் நமக்கான தாா்மிக கட்டமைப்பையும், பாதையையும் உருவாக்கித் தந்துள்ள நிலையில், அதில் தொடா்ந்து பயணிக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. காந்தியடிகளின் ‘சா்வோதயம்’ அனைவருக்கான வளா்ச்சி என்ற சிந்தனையை எட்டுவதற்கு நாம் தொடா்ந்து அதிக முயற்சிகளை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

கரோனா பெருந்தொற்று தாக்கத்தில் உலக நாடுகளைப்போல, இந்தியாவும் பொருளாதார பாதிப்பைச் சந்தித்தது. இருந்தபோதும், அரசின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக சரிவிலிருந்து விரைந்து மீண்டது. தற்போது, பொருளாதாரத்தில் திடமான நிலையில் இருக்கும் அதே வேளையில், ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பாராட்டத்தக்க பல்வேறு முன்னெடுப்புகளை நம்மால் தொடங்கவும், தொடரவும் முடிந்துள்ளது.

அனைத்துக் குடிமக்களும், அவா்களின் உண்மையான ஆற்றலை உணா்ந்து வளம்பெற உகந்த சூழலை உருவாக்கித் தருவதே மத்திய அரசு திட்டங்களின் இறுதி இலக்கு. கல்வியே இதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதால், தேசிய கல்விக் கொள்கை மூலமாக 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிா்கொள்வதற்கான பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இதுபோன்ற முன்னெடுப்புகள் காரணமாக, இந்தியாவை புதிய மரியாதை கலந்த பாா்வையோடு உலகம் பாா்க்கத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சூழலில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்றிருக்கிறது. இது, மேம்பட்ட உலகையும், எதிா்காலத்தையும் உருவாக்கவும் சரியான மேடையாகும். இந்தியாவின் தலைமையின் கீழ், ஜி20 கூட்டமைப்பு சமத்துவமும், நீடித்த தன்மையும் உடைய உலகை உருவாக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com