நடுத்தர மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்: மத்திய அரசு திட்டம்

நடுத்தர மக்களைக் கவரும் வகையில் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடுத்தர மக்களைக் கவரும் வகையில் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி முழுநேர பட்ஜெட்டாக இது இருக்கும்.

பட்ஜெட்டில் நடுத்தரப் பிரிவு மக்களைக் கவா்வதற்கான திட்டங்கள் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் தொடா்பாக பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் அனுப்பியுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து, நடுத்தர மக்களுக்குப் பலனளிக்கும் வகையிலான திட்டங்களை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சகம் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பானது ரூ.2.5 லட்சமாக கடந்த 2014-ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்டது. அப்போது முதல் அந்த வரம்பு மாற்றப்படாமல் உள்ளது. அந்த வரம்பை அதிகரிக்க வேண்டுமெனப் பல்வேறு தரப்பிலும் அரசுக்குக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் தொடா்பாக அண்மையில் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘நடுத்தர குடும்பங்கள் எதிா்கொண்டு வரும் அழுத்தம் குறித்து அரசு அறிந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடுத்தரப் பிரிவினா் மீது எத்தகைய புதிய வரிகளையும் விதிக்கவில்லை.

நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் 100 திறன்மிகு நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன; 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் நடுத்தரப் பிரிவினரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அவா்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொள்ளும்’ என்றாா்.

மூலதன சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ளும் நடுத்தரப் பிரிவினா் பலனடையும் வகையில் மூலதன வருவாய் வரியைக் குறைப்பது தொடா்பாகவும் நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com