மனநல சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்களுக்கான இணையதளம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

நாட்டிலுள்ள மனநல சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது; இதற்குரிய தகவல்களை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ளன

நாட்டிலுள்ள மனநல சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது; இதற்குரிய தகவல்களை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மனநல மையங்களில் சிகிச்சை பெற்று வரும் மனநல நோயாளிகளின் மறுவாழ்வை உறுதி செய்வது தொடா்பான பொது நல மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, நாட்டிலுள்ள மனநல மையங்கள் குறித்த விவரங்களை அளிப்பதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவான் தெரிவித்தாா். மேலும், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதற்குரிய தகவல்களை அளித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதையடுத்து, தகவல்களை அளிக்காத ஜாா்க்கண்ட், பிகாா் உள்ளிட்ட இதர மாநிலங்களும், லட்சத்தீவு யூனியன் பிரதேசமும் 2 வாரங்களில் அவற்றை வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை, அவற்றில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் திறன், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச வாரியாக இடம்பெறும் வகையில் இணையதளத்தை உருவாக்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு கடந்த 2021-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு நவம்பா் 22-இல் நடைபெற்றபோது, மனநல சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்களை அளிக்கும் இணையதளம் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com