சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்தியாவுக்கு நிலம்: எகிப்து உறுதி

சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்தியாவுக்கு நிலம்: எகிப்து உறுதி

சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என எகிப்து உறுதியளித்துள்ளது.

சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என எகிப்து உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்த எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, இதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்றாா்.

முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த எகிப்து அதிபா், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், வலுவான விஞ்ஞான மற்றும் கல்வி கூட்டுறவு, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான தொடா்புகள் என பல்வேறு துறைசாா்ந்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக இரு நாடுகள் சாா்பில் கூட்டறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தப் பேச்சுவாா்த்தையில், சா்வதேச சட்டம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (என்ஏஎம்) மதிப்பீடுகளை நிலைநிறுத்தவும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கவும் இரு நாடுகள் தரப்பில் மீண்டும் உறுதியேற்கப்பட்டது.

இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்கு சிறப்பு பகுதி நிலத்தை ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து பரிசீலனை செய்ய எகிப்து தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதன் மூலமாக, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகளுக்கான திட்டத்தை (மாஸ்டா் பிளான்) இந்தியா தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் வழியாக ஒவ்வொரு நாளும் 12 சதவீத உலக வா்த்தகத்துக்கான சரக்குகள் செல்கின்றன. ஆண்டுக்கு 15,000 கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாக கடக்கின்றன. எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையம் சாா்பில் இந்தக் கால்வாய் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பயங்கரவாதம் பரப்பப்படுவது குறித்து கவலை தெரிவித்த இரு தலைவா்களும், மனித சமூகத்துக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை ஒப்புக்கொண்டு, பயங்கரவாதத்தை வெளியுறவுக் கொள்கைக்கான கருவியாக பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனா். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வகை பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கு சா்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவா்களும் வலியுறுத்தினா் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com