துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற ஒடிசா அமைச்சர் பலி

துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற ஒடிசா அமைச்சர் பலி

ஒடிசாவில் காவல் உதவி ஆய்வாளரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

புவனேஷ்வர்: ஒடிசாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை காவல் உதவி ஆய்வாளரால்  சுடப்பட்ட அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் துப்பாக்கி குண்டு காயங்களால் சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பணக்காரர் என்று கூறப்படும் 60 வயதான ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ், ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டத்தில் பிரஜராஜநகரில் உள்ள காந்தி சௌக் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.15 மணியளவில் அவர் தனது காரில் இருந்து இறங்கும்போது காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். 

இதில், துப்பாக்கியின் ஒரு குண்டு அவரது மார்பின் இடது பக்கத்தில் குண்டு புகுந்து வெளியேறியது, இருதயம் மற்றும் இடது நுரையீரலில் காயம் மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் உடனிடாயாக காரின் இருக்கையில் சாய்ந்தார். இதில் அமைச்சரின் அருகில் நின்றிருந்த காவலர் மற்றும்  ஒரு இளைஞருக்கு லேசானா காயம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் மீது குறைந்தது நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் நபாதாஸ் உடனடியாக ஜார்சுகுடாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் மேல் சிகிச்சைக்காக புவனேஷ்வருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

புவனேஷ்வர் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு "காயங்கள் சரி செய்யப்பட்டு, இருதய செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வந்தனர். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், அவர் சிகிச்சை பலனளிக்கால் உயிரிழந்ததாக," அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக், குற்றப்பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டார். பின்னர், அமைச்சர் நபாதாஸ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று அவரது மகன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து "ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்" தெரிவித்தார். நபாதாஸ் அரசுக்கும் கட்சிக்கும் ஒரு சொத்தாக இருந்தார். அவரது மறைவு ஒடிசா மாநிலத்திற்கு ஒரு பெரிய இழப்பு என முதல்வர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் ஏன் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதற்கான  காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து அவரிடம்  காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்". 

சுகாதார அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் இருந்துள்ள நிலையில், ஜார்சுகுடா மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com