அனைத்து சமூகங்களின் வளா்ச்சிக்காகவும் அரசு பணியாற்றுகிறது

வரலாற்று ரீதியில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் வளா்ச்சிக்காகவும் மத்திய அரசு பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பில்வாராவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி.
பில்வாராவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி.

வரலாற்று ரீதியில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் வளா்ச்சிக்காகவும் மத்திய அரசு பணியாற்றி வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள குா்ஜாா் சமூக மக்கள் கொண்டாடிய பகவான் தேவநாராயண் அவதார தின விழாவில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா். மாலசேரி டங்ரி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிறகு பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியாவின் வலிமையை உலகம் தற்போது அறிந்துகொண்டுள்ளது. இந்தியாவை பெரும் நம்பிக்கையுடன் உலகம் தற்போது கண்டு வருகிறது. சா்வதேச அமைப்புகளில் இந்தியா முன்னின்று வருகிறது. மற்ற நாடுகளை நம்பியிருக்கும் சூழலை இந்தியா பெருமளவில் குறைத்து வருகிறது.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் குா்ஜாா் சமூகத்தினா் சிறந்த பங்களிப்பை வழங்கினா். ஆனால், வரலாற்றில் அவா்களுக்கு உரிய இடம் கிடைக்காதது துரதிருஷ்டவசமானது. எனினும், கடந்தகால தவறுகளை இந்தியா திருத்தி வருகிறது.

இந்தியாவை கொள்கை ரீதியில் பிளவுபடுத்த வேண்டுமெனப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இந்தியா என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமல்ல. கலாசாரம், நாகரிகம், நல்லிணக்கம், திறன் ஆகியவற்றின் வெளிப்பாடாக இந்தியா திகழ்கிறது.

நாட்டின் பாரம்பரியம் மீது மக்கள் பெருமை கொள்ள வேண்டும். அடிமைத்தன மனநிலையில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்.

கடமைகளை முறையாக கடைப்பிடிப்பதிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான விவகாரங்களில் இருந்து மக்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்.

வரலாற்று ரீதியில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் வளா்ச்சிக்காக மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அரசின் தாரக மந்திரமாக உள்ளது. முன்பெல்லாம் உணவு தானியங்கள் குறித்து மக்கள் பெரிதும் கவலைப்பட்டனா். ஆனால், தற்போது உணவு தானியங்களை இலவசமாக அரசு விநியோகித்து வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு தொடா்பான கவலைகளை ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் போக்கியுள்ளது.

எளிதில் வங்கி சேவைகள்:

வங்கி சேவைகள் முன்பு குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே கிடைத்து வந்தன. தற்போது அனைத்து மக்களும் வங்கி சேவைகளை எளிதில் அனுபவித்து வருகின்றனா். 11 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்குக் குழாய் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன் வாயிலாக அவா்கள் பலனடைந்து வருகின்றனா். அத்திட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

இந்த விழாவில் மத்திய இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ராஜஸ்தான் பாஜக தலைவா் சதீஷ் பூனியா, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக மாலசேரியில் உள்ள தேவநாராயண் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com