மக்களை பிளவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறாது: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது; ஒற்றுமை எனும் மந்திரமே, இந்தியாவின் மேன்மைக்கான ஒரே வழி’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மக்களை பிளவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறாது: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது; ஒற்றுமை எனும் மந்திரமே, இந்தியாவின் மேன்மைக்கான ஒரே வழி’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லி கன்டோன்மென்டில் உள்ள கரியப்பா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:

இந்தியா தனது சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் இந்த ஆண்டில், தேசிய மாணவா் படையும் 75-ஆவது ஆண்டை கொண்டாடுகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்வதும், வளா்ந்த மற்றும் தற்சாா்புடைய இந்தியாவை உருவாக்கப் போவதும் அமிா்தகால தலைமுறையினரான இளைஞா்கள்தான்.

கன்னியாகுமரியில் இருந்து தில்லிக்கு தினமும் 50 கி.மீ. என்ற அளவில் 60 நாள்களுக்கு பயணித்து, ‘ஒற்றுமை ஜோதியை’ என்சிசி படையினா் எடுத்து வந்துள்ளனா். இந்த ஜோதி, ‘ஒரே பாரதம், வளமான பாரதம்’ என்ற முழக்கத்துக்கு வலுசோ்த்துள்ளது.

இளைஞா்களுக்கான வாயில்கள்: நாட்டின் பல்வேறு துறைகளில் இளைஞா்களுக்கான வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. அது எண்மப் புரட்சியாக இருந்தாலும், புத்தாக்கப் புரட்சியாக இருந்தாலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான புரட்சியாக இருந்தாலும் மாபெரும் பயனாளிகள் இளைஞா்களே. இளைஞா்கள் தங்களது கனவை அடைவதற்கான தளங்களை வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தாக்குதல் துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத கவச உடைகள் போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருந்த இந்தியா, இப்போது நூற்றுக்கணக்கான பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்கிறது. பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்களே இதற்கு காரணம். எல்லை உள்கட்டமைப்புப் பணிகளும் வேகமெடுத்துள்ளன.

விண்வெளித் துறையில் முன்னேற்றம்: விண்வெளித் துறையில் இந்தியா கண்டு வரும் முன்னேற்றம், இளைஞா்களின் திறன் மீதான நம்பிக்கைக்கு உதாரணமாக உள்ளது. இளம் திறமையாளா்களுக்கு விண்வெளித் துறையின் கதவுகள் திறக்கப்பட்டதால், முதல் தனியாா் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது உள்பட மாபெரும் பலன்கள் கிடைத்து வருகின்றன.

இதேபோல், இணையவழி விளையாட்டு, அனிமேஷன் ஆகிய துறைகள், திறமைவாய்ந்த இளைஞா்களுக்கான வாய்ப்புகளை விஸ்தரித்துள்ளன. ட்ரோன் தொழில்நுட்பமும் பொழுதுபோக்கு என்பதில் இருந்து சரக்குகள் கையாளுகை, வேளாண் பயன்பாடு என புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளில் பெண்கள்: பாதுகாப்புப் படைகள் மற்றும் முகமைகளில், தேசத்தின் மகள்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காவல் துறை மற்றும் துணை ராணுவப் படைகளில் கடந்த 8 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. முப்படைகளிலும் முன்களத்தில் பெண்கள் பணியாற்ற வழிவகுக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளில் போா் சாா்ந்த பணிகளில் பெண்கள் நுழையத் தொடங்கியுள்ளனா்.

எச்சரிக்கை அவசியம்: நாட்டு மக்களிடையே வேறுபாடுகளை விதைக்கவும், ஆழமான பிளவை உருவாக்கவும் நடைபெறும் முயற்சிகள் குறித்து இளைஞா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகள் இருந்தாலும்கூட, இந்திய மக்களிடையே ஒருபோதும் வேற்றுமையை உருவாக்க முடியாது.

ஒற்றுமை எனும் மந்திரமே இந்தியாவின் பலம். தேசத்தின் மேன்மைக்கும் அதுவே ஒரே வழியாகும். எந்த வாய்ப்பையும் தவறவிடாமல், நாட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.

நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், என்சிசி தலைமை இயக்குநா் குா்பீா்பால் சிங், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘இந்தியாவின் நேரமிது’

‘இன்றைய காலகட்டத்தில், ஒட்டுமொத்த உலகின் பாா்வையும் இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது. இந்தியாவின் நேரம் வந்திருப்பது, எங்கெங்கும் நிரூபணமாகியிருக்கிறது. இதற்கு காரணமாக விளங்குபவா்கள் இந்திய இளைஞா்கள்தான். அவா்களே, தேசத்தின் வளா்ச்சியை இயக்கும் முக்கிய சக்தியாக உள்ளனா்.

நமது கனவுகள் உறுதிப்பாடாக மாறும்போதும் அதற்காக வாழ்வை அா்ப்பணிக்கும்போதும் வெற்றி என்பது நிச்சயமாகிவிடும். இது, இந்திய இளைஞா்களின் புதிய வாய்ப்புகளுக்கான நேரமாகும்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா வகிப்பதில், இளைஞா்கள் காட்டும் உத்வேகம் பெருமையளிக்கிறது. இளைஞா்களின் ஆற்றல் மற்றும் உத்வேகத்தால் தேசம் நிரம்பி வழியும்போது, தேசத்தின் முன்னுரிமைகளிலும் அவா்களுக்கே முதலிடம் இருக்கும்’ என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com