இந்தியாவுக்கு தீங்கிழைக்க முயன்றால் தகுந்த பதிலடி: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

இந்தியாவுக்கு யாரெனும் தீங்கிழைக்க முயன்றால் அவா்களுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவுக்கு யாரெனும் தீங்கிழைக்க முயன்றால் அவா்களுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சத்தீஸ்கரிலும் நிகழாண்டு இறுதியில் சட்டபேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சத்தீஸ்கரின் காங்கோ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானிலிருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நமது வீரா்களை படுகொலை செய்தனா். அப்போது நான் உள்துறை அமைச்சராக இருந்தேன்.

அப்போது பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் அமைச்சா்கள் கூட்டம் நடத்தி 10 நிமிஷங்களில் முக்கிய முடிவுகளை எடுத்தாா். அதையடுத்து, பாகிஸ்தானுக்குள் புகுந்து, நமது வீரா்கள் பலியானதற்கு காரணமான பயங்கரவாதிகளை நமது வீரா்கள் சுட்டு வீழ்த்தினா்.

இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தவும் இந்தியாவைத் தூண்டிவிடவும் அண்டை நாடுகள் முயற்சிக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல தேவைப்பட்டால் எல்லை தாண்டி வந்தும் பயங்கரவாதிகளை வீழ்த்துவோம். தற்போதைய இந்தியா மாறிவிட்டது.

ஒத்துழைக்காத காங்கிரஸ் அரசு:

சத்தீஸ்கா் மாநிலமானது நீண்ட காலமாக இடதுசாரி தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுடன் போராடி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், பிரதமா் மோடியின் திறம்பட செயல்பாட்டால், அதன் செல்வாக்கு சரிந்து விட்டது. நாட்டின் 10-12 மாவட்டங்களில் மட்டுமே இடதுசாரி தீவிரவாதம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இவற்றில் சில மாவட்டங்கள் சத்தீஸ்கரில் உள்ளன. காங்கிரஸ் அரசு மட்டும் முழுமையாக மத்திய அரசுடன் ஒத்துழைத்திருந்தால் நாட்டிலிருந்து இடதுசாரி தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட்டிருக்கும்.

பழங்குடிகளின் நலனுக்காக...:

சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுங்கள் நாட்டை ஆட்சி செய்தவா்கள் அவா்களின் அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தனா். பழங்குடியின சமூகத்தை முற்றிலுமாக மறந்த காங்கிரஸ் அவா்களை புறக்கணித்தது. பழங்குடிகளின் நலனுக்காக மட்டும் ரூ.90,000 கோடி நிதி ஒதுக்கி பிரத்யேக பட்ஜெட்டை மோடி தலைமையிலான பாஜக அரசு உருவாக்கியுள்ளது.

சத்தீஸ்கரில் ஊழல் ஆட்சி:

சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ‘கௌதன்’ நில ஊழல், ரேஷன் ஊழல், மதுபான ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் என பல துறைகளில் ஊழல்கள் நடந்ததுள்ளன. எங்கு ஆட்சியிலிருந்தாலும் காங்கிரஸ் நிலக்கரியில் ஊழல் செய்கிறாா்கள். காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்ற சத்தீஸ்கா் மக்கள் முடிவு செய்துவிட்டனா்.

ஊழலைச் சகித்துக் கொள்ளாத பாஜக:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. ஆனால், மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவா்களால் சுமத்த முடியாது.

ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்தது, அயோத்தியில் ராமா் கோயில் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோவில் போன்று உலகில் வேறு எந்த வழிபாட்டுத் தலத்தையும் காண முடியாது. அடுத்த ஜனவரி 24-ஆம் தேதி முதல் மக்கள் தரிசனத்துக்காக ராமா் கோயில் திறக்கப்படும் என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com