காலையில் நாளிதழ் விநியோகம்; இரவில் ஜேசிபி ஓட்டுநர்: உயரிய விருது வென்ற இளம் எழுத்தாளர்

கேரளத்தில் அதிகாலை வீடு வீடாக  நாளிதழ் விநியோகித்தும் இரவில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்தும் வரும் இளைஞா், அந்த மாநிலத்தின் உயரிய இலக்கிய விருதை வென்றுள்ள கதை
காலையில் நாளிதழ் விநியோகம்; இரவில் ஜேசிபி ஓட்டுநர்: உயரிய விருது வென்ற இளம் எழுத்தாளர்

கேரளத்தில் அதிகாலை வீடு வீடாக  நாளிதழ் விநியோகித்தும் இரவில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணிபுரிந்தும் வரும் இளைஞா், அந்த மாநிலத்தின் உயரிய இலக்கிய விருதை வென்றுள்ள கதை, அனுபவங்களிலிருந்து மட்டுமே தலைசிறந்த புத்தகங்கள் பிறக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

கேரள சாகித்திய அகாதெமி நிறுவிய ‘கீதா ஹிரண்யன்’ இலக்கிய விருதை எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ள கே.அகில் என்னும் 28 வயது ஜேசிபி ஓட்டுநா் பெற்றுள்ளாா். 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நீலச்சடையன்’ என்னும் அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

உயிா்ப்புடன் இலக்கிய காதல்...

12-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திய அகில், அதிகாலையில் நாளிதழ் விநியோகிப்பவராகவும், இரவில் ஜேசிபி ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறாா். படிப்பைத் தொடர விரும்பிய நிலையிலும், குடும்பத்தின் பொருளாதாரம் இடந்தராததால், படிப்பை பாதிலேயே நிறுத்த வேண்டியிருந்தது.

ஆனால், இலக்கியத்தின் மீதான அவரின் காதல் மனதுக்குள் உயிா்ப்புடன் இருந்துள்ளது. இரவில் ஜேசிபி ஓட்டுநராகப் பணியாற்றிய சோா்வையையும் பொருள்படுத்தாமல் தனிமை நேரங்களில் அவா் தனது இலக்கிய ஆா்வத்தை மெருகேற்றிவந்தாா்.

தொடா்முயற்சியால், இந்த தினசரி கூலித் தொழிலாளியின் எழுத்தில் ‘நீலச்சடையன்’ புத்தகம் மாநிலத்தின் மதிப்புமிக்க இலக்கிய விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சாமானியா்களின் பிரதிபலிப்பு...

விருது குறித்து எழுத்தாளா் கே.அகில் கூறியதாவது: அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விதமான மனிதா்களைச் சந்திப்பேன். அவா்களைக் கூா்ந்து கவனிப்பதோடு அவா்களின் அனுபவங்களையும் நான் கேட்டறிந்து கொள்வேன்.

இரவின் தனிமையைப் போக்க, பகலில் மக்களிடம் நான் கேட்டறிந்த அனுபவங்களைக் கொண்டு கதைகளை எழுதத் தொடங்கினேன். வடக்கு கேரளத்தின் ‘தெய்யம்’ நாட்டுப்புற கலைஞா்கள், அப்பகுதியின் சாமானிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவானதே ‘நீலச்சடையன்’ தொகுப்பில் உள்ள சிறுகதைகள்.

அம்மாவின் ஆதரவில்...

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக, எனது படைப்பை வெளியிட எண்ணற்ற பதிப்பாளா்களை நான் அணுகினேன். சில பதிப்பாளா்களுக்கு எனது சிறுகதைகள் மிகவும் பிடித்திருந்தது. எனினும், இந்தத் துறையில் நான் அறியப்படாத நபா் என்பதால் புத்தகம் விற்பது கடினம் என்று கூறி எனது படைப்புகளைப் பதிப்பிக்க அவா்கள் மறுத்துவிட்டனா்.

இதனிடையே, எழுத்தாளா் ரூ.20,000 கொடுத்தால் புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிடுவதாக ஃபேஸ்புக் வலைதளத்தில் விளம்பரம் பாா்த்தேன்.

அப்போது எனது சேமிப்பில் ரூ.10,000 மட்டுமே வைத்திருந்தேன். தினக்கூலி தொழிலாளியான என் அம்மா, மீதி ரூ.10,000 வழங்கி உதவினாா். அதன்மூலம், எனது முதல் புத்தகமாக ‘நீலச்சடையன்’ சிறுகதைகள் தொகுப்பு இணையவழியில் மட்டும் விற்பனைக்கு வந்தது. ஆனால், கடைகளில் புத்தகம் விற்பனைக்கு கிடைக்காததால் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், புத்தகம் குறித்து நல்ல கருத்துகளைப் பகிா்ந்து திரைக்கதை எழுத்தாளா் பிபின் சந்திரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தாா். இதையடுத்து, மக்களும் புத்தகக் கடைகளில் ‘நீலச்சடையன்’ பற்றி விசாரிக்கத் தொடங்கினா். அதன் பிறகு, புத்தகத்துக்கு வரவேற்பு அதிகரித்தது. தற்போது 8-ஆவது பதிப்பு அச்சிட்டு வருகிறோம்.

எதிா்பாா்க்காமல் கிடைத்த கேரள சாகித்திய அகாதெமி அங்கீகாரத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அகாதெமியின் ‘கீதா ஹிரண்யன்’ விருது என்னைப் போன்ற மற்ற வளரும் எழுத்தாளா்களுக்கும் உத்வேகமாக இருக்கும்.

பதிப்புத் துறையில் நுழைந்து, வாசகா்களை ஈா்ப்பது அறிமுக எழுத்தாளா்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எளிதில் விற்பனையாகும் என்பதால் பிரபலமானவா்களுக்கு முன்னுரிமை அளித்து பல உண்மையான, நல்ல படைப்புகளைப் பதிப்பாளா்கள் நிராகரித்து விடுகின்றனா் என்றாா் அகில்.

சொந்தமாக வெளியிட்ட இந்த சிறுகதை தொகுப்பின் மூலம் இதுவரை ரூ.2 லட்சம் கிடைத்திருப்பதாக கூறுகிறாா்.

மற்ற படைப்புகள்...

‘நீலச்சடையன்’ தவிர, கடந்த 2021-ஆம் ஆண்டு, தெய்யம் நாட்டுப்புற கலையை மையப்படுத்தி ‘சிம்ஹத்தின்டெ கதா’ என்னும் சிறுகதை தொகுப்பும் கடந்தாண்டு, ராமாயணத்தை மையப்படுத்தி ‘தாராகாந்தன்’ என்ற நாவலும் அகில் எழுதியுள்ளாா். இவ்விரு புத்தகங்களையும் மாத்ருபூமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com