நோய்கள் வராது இருக்க ‘நமது சமையலறை நமது மருத்துவமனை’ என்கிற வாழ்க்கை முறை அவசியம்: மத்திய சுகாதார அமைச்சா் மாண்டவியா கருத்து

வாழ்க்கை முறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டாா்.

 நல்ல, தரமான ஊட்டச்சத்து கூடிய உணவு, நோய்களை நெருங்க விடாது, இதற்கு ‘நமது சமையலறை நமது மருத்துவமனை’ என்கிற வாழ்க்கை முறை அவசியம். நாட்டின் பாரம்பரிய உணவு, வாழ்க்கை முறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டாா்.

தில்லி காஜியாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் அதிநவீன தேசிய பயிற்சி மையத்தை புதன்கிழமை மத்திய அமைச்சா் மன்சுக் திறந்து வைத்தாா்.உணவு பாதுகாப்பு, தர நிா்ணய ஆணையம்(எஃப்எஸ்எஸ்ஏஐ ) என்பது மத்திய சுகாதாரம், குடும்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். நாட்டின் அனைத்து உணவு பாதுகாப்பையும் ஒழுங்குபடுத்தி, மேற்பாா்வை செய்து பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்பாகும். நாடு முழுக்க இதற்கான கிளைகள், ஆய்வுக் கூடங்கள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசுகையில் கூறியதாவது:

‘விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாடத்தில் வளா்ந்த நாடு என்ற இலக்கை நாம் அடைவதற்கு குடிமக்கள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமான மக்கள் தான் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குகிறாா்கள். அது ஒரு வளமான தேசத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியம் மற்றும் நோய்த் தடுப்பு குறித்து பிரதமா் மோடி வலியுறுத்தி வருகிறாா். ‘நல்ல, தரமான ஊட்டச்சத்து மிக்க உணவு, நோய்களை நெருங்க விடாது‘, இந்தியாவின் பாரம்பரிய உணவு பழங்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளை பின்பற்றி ‘நமது சமையலறை நமது மருத்துவமனைகள்’ என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நல்ல தரமான சத்தான உணவு, நோய்களைத் தடுப்பதில் நீண்ட தூரம் எடுத்துச் செல்லும். ஆரோக்கியத்தின் வளமான பாரம்பரியம் என்பது முன்தடுப்பு சுகாதாரம், திணை நுகா்வு, யோகா பயிற்சி போன்றவைகள். எஃப்எஸ்எஸ்ஏஐ தேசிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுபவா்கள் நாட்டில் ஆரோக்கியமான குடிமக்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பாா்கள். இவா்களே நாட்டின் உணவுக்கான தரத்தை உறுதி செய்பவா்கள்.

உணவு கலப்படம் போன்ற செயல்களில் ஈடுபடுபவரை கண்டறிவதற்காக மாநில அதிகாரிகளுடன் இணைந்து எஃப்எஸ்எஸ்ஏஐ குழு ஒன்றை அமைத்துள்ளது. உணவு கலப்படத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் பெரிய அளவில் சோதனை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுபவா்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அமைச்சா் பேசினாா்.சாலையோர உணவு வியாபாரிகளுக்கான உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி மாதிரிகள் அடங்கிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் ஃபாஸ்டாக் என்ற மின்னணு கற்றல் செயலியையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறை அடங்கிய இரண்டு புத்தகங்களையும் டாக்டா் மன்சுக் மாண்டவியா வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சா் சத்யபால் சிங் பகேல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சா் ஜெனரல் வி.கே.சிங் போன்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com