மும்பை: அகமதுநகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் தக்சாலே என்பவர், தனக்கு ஏற்பட்ட அதிகப்படியான கடனை அடைப்பதற்காக காப்பீடு மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார்.
ரூ.2 கோடி மதிப்பிலான காப்பீடு மோசடியை அவர் அரங்கேற்ற அவருக்கு காவலர், கணக்கு தணிக்கையாளர், மருத்துவர், வழக்குரைஞர் என பலரும் உதவி செய்து தற்போது கம்பியெண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எல்ஐசியில் எடுக்கப்பட்ட ரூ.2 கோடி காப்பீட்டுத் தொகையை மோசடியாக பெற முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் சுமார் 550 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு எல்ஐசியில் தினேஷ் என்பவர் 2 கோடிக்கு காப்பீடு எடுத்துள்ளார். அப்போதே அவர் போலியான ஆவணங்களை தயாரித்து வழக்குரைஞர் மற்றும் கணக்கு தணிக்கையாளரிடம் கையெழுத்துப் பெற்று தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் காப்பீடுத் தொகையை சரியாகக் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், சாலை விபத்தில் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்த ஒரு நபரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அதனைக் கொண்டு வந்த காவலர் தேஷ்முக், அது தினேஷின் உடல் என அடையாளம் கூறுகிறார். பிறகு மருத்துவமனைக்கு தினேஷின் தாய் என்று கூறி வந்த பெண் ஒருவர் அதனை தினேஷ் உடல் என உறுதியளிக்கிறார்.
இந்த வழக்கில், தினேஷின் தாய் வாக்மோட், எல்ஐசி நிறுவனத்துக்கு, தினேஷ் எடுத்திருந்த ரூ.2 கோடி காப்பீட்டுத் தொகையைப் பெற வந்தபோதுதான், எல்ஐசி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
இந்த புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரித்தபோது, இது ஒட்டுமொத்த நாடகம் என்பதை கண்டறிகிறார்கள். இதுவரை அந்த உடல் யாருடையது என்பது அடையாளம் காணப்படவில்லை. குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.