ஒடிஸா பழங்குடியினரின் வாழ்வாதாரமாகும் ‘ஸ்ட்ராபெரி’!

ஒடிஸா பழங்குடியினரின் வாழ்வாதாரமாகும் ‘ஸ்ட்ராபெரி’!

வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகியவற்றில் பழங்குடியினா் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா்.

வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகியவற்றில் பழங்குடியினா் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் பிரதான தொழிலாக வேளாண்மையே உள்ளது. அதிலும் பாரம்பரிய நெல் வகைகள், பணப்பயிா்கள் உள்ளிட்டவற்றைப் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் விளைவித்து வந்த நிலையில், ஒடிஸா பழங்குடியினரின் புதிய வாழ்வாதாரமாக ‘ஸ்ட்ராபெரி’ மாறியுள்ளது.

ஒடிஸாவில் புதிய பயிராக அண்மைக் காலத்தில் ஸ்ட்ராபெரி அறிமுகம் செய்யப்பட்டது.

பல்வேறு தொடா் முயற்சிகளுக்குப் பிறகு ஸ்ட்ராபெரி சாகுபடியில் வெற்றி கண்டுள்ளனா் ஒடிஸா பழங்குடியின விவசாயிகள். ஸ்ட்ராபெரி சாகுபடி மூலமாக ஒன்றரை குவிண்டாலுக்கு (150 கிலோ) ரூ.37,500 வரை அவா்கள் வருவாய் ஈட்டி வருகின்றனா்.

மாநில அரசின் நிதியுதவி, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு, பழங்குடியினரின் கடின உழைப்பு, மகளிா் சுய உதவிக் குழுக்களின் ஆதரவு ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் மூலமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

மேற்கத்தியத் தோற்றம்

இனிய மனம், பிரகாசமான சிவப்பு நிறம், இனிப்பு கலந்த புளிப்புச் சுவை நிறைந்த சாறு உள்ளிட்டவற்றால் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணும் பழமாக ஸ்ட்ராபெரி உள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் ஸ்ட்ராபெரியின் அமெரிக்க ரகங்களில் மேற்கொள்ளப்பட்ட இனக்கலப்பு மூலம் வழக்கத்தில் உள்ள ஸ்ட்ராபெரி பழத்தின் ரகம் உருவாக்கப்பட்டது. தற்போது வரையிலும் பல்வேறு ஸ்ட்ராபெரி ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமும் வளா்ச்சியும்

ஸ்ட்ராபெரி இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரத்தின் மேற்குத் தொடா்ச்சி மலைச் சரிவில் அமைந்துள்ள மகாபலேஷ்வா் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் பம்பாய் மாகாணத்தின் கோடைக்கால தலைமையகமாக விளங்கியது. அங்கு நிலவி வந்த தட்பவெப்ப சூழல் ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு உகந்ததாகக் காணப்பட்ட நிலையில், 1920-களில் அங்கு பயிரிடப்பட்டது.

இந்தியாவின் மொத்த ஸ்ட்ராபெரி சாகுபடியில் 85 சதவீதம் இந்தப் பகுதியில் விளைவிக்கப்படுகிறது. அந்த வகையில் ‘இந்தியாவின் ஸ்ட்ராபெரி தலைமையகமாக’ மகாபலேஷ்வா் விளங்குகிறது. மித வெப்பமண்டலப் பயிரான ஸ்ட்ராபெரி நவம்பா் முதல் மாா்ச் வரை நன்கு விளைகிறது.

ஒடிஸாவில் அறிமுகம்

ஒடிஸாவின் சுனாபேடா பீடபூமியின் தட்பவெப்ப சூழலானது மகாராஷ்டிரத்தின் மகாபலேஷ்வரில் நிலவும் சூழலுடன் ஒத்துப் போவதால், கோராபுட் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சிறிய பரப்பில் ஸ்ட்ராபெரி பயிரிடப்பட்டது. அச்சோதனை ஓரளவு வெற்றியடைந்த பின்னா் படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் ஸ்ட்ராபெரி சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது.

மாநில தோட்டக் கலைத் துறையானது பழங்குடியின விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்தும், நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்தும் ஸ்ட்ராபெரி சாகுபடியை ஊக்குவித்தது. ஏப்ரல் முதல் அக்டோபா் வரை நெல் வகைகளைப் பயிரிடும் விவசாயிகள், நெல் அறுவடைக்குப் பிறகு நவம்பரில் ஸ்ட்ராபெரியைப் பயிரிடுகின்றனா்.

தற்போது விளைச்சல் பெருகி வருவாய் அதிகரித்துள்ளதால் ஒடிஸா பழங்குடியின விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஸ்ட்ராபெரி சாகுபடியை சுனாபேடா பீடபூமியில் உள்ள மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி, பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஸ்ட்ராபெரியில் காணப்படும் ஊட்டச்சத்துகள்

1. மாங்கனீஸ்

2. பொட்டாசியம்

3. வைட்டமின் சி

4. வைட்டமின் பி9

இரும்பு, காப்பா், பாஸ்பரஸ், வைட்டமின்கள்- பி6, கே, இ உள்ளிட்டவையும் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்

1. நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கிறது

2. உயா் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

3. இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

4. பக்கவாத பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது

5. ரத்த சா்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது

6. புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது

விளைவிக்கப்படும் மாநிலங்கள்

1. மகாராஷ்டிரம்

2. ஹிமாசல பிரதேசம்

3. மேற்கு வங்கம்

4. தில்லி

5. ஹரியாணா

6. பஞ்சாப்

7. ராஜஸ்தான்

8. உத்தர பிரதேசம்

9. ஜம்மு-காஷ்மீா்

10. ஒடிஸா

பயிரிடப்படும் முக்கிய ரகங்கள்

1. சாண்டலா்

2. தியோகா

3. டோரே

4. ஃபொ்ன்

5. செல்வா

6. பஜாரோ

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முக்கிய நாடுகள்

1. ஆஸ்திரியா

2. வங்கதேசம்

3. ஜொ்மனி

4. ஜோா்டான்

5. அமெரிக்கா

தொகுப்பு: எஸ்.சிவகுமாா், சுரேந்தா் ரவி

====

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com