மகாராஷ்டிரம்: 6 இருமல் மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவருவதாக சா்வதேச அளவில் புகாா்கள் எழுந்து வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவருவதாக சா்வதேச அளவில் புகாா்கள் எழுந்து வரும் சூழலில், மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த 6 இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை மாநில அரசு தற்காலிக ரத்து செய்துள்ளது.

காம்பியாவில் கடந்த ஆண்டு 66 குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவின் ஹரியாணா மாநிலம் சோனிபட்டை சோ்ந்த மெய்டன் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளே காரணம் எனப் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்தது. ஆனால், இந்த மருந்துகள் உரிய தரத்துடன் இருப்பதாக இந்தியா சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் இயங்கும் ‘மரியான் பயோடெக்’ நிறுவன இருமல் மருந்து உட்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்தும் மத்திய அரசு ஆய்வு நடத்தியது. இந்த ஆயவின் முடிவில், அந்த நிறுவனத்தின் 22 மருந்துகள் தரமற்றவை என்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக வழக்குப் பதிவு செய்த நொய்டா போலீஸாா், கைது நடவடிக்கையை தொடங்கினா். நிறுவனத்தின் 2 இயக்குநா்களும் தலைமறைவான நிலையில் 3 ஊழியா்களை மட்டும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்தச் சூழலில், மகாராஷ்டிரத்தில் செயல்பட்டுவந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விதிகளை மீறியதாக அவற்றின் உரிமத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இதுதொடா்பாக, மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் பாஜக உறுப்பினா் ஆஷிஸ் ஷெலா் உள்பட உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விக்கு மாநில உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத் துறை அமைச்சா் சஞ்சய் ரத்தோட் பதிலளித்ததாவது:

ஹரியாணா மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை உட்கொண்டதால் காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததாக புகாா் எழுந்தது. அந்த நிறுவனத்தின் கிளைகள் மகாராஷ்டிரத்தில் செயல்படவில்லை என்றபோதும், விதிகளை மீறி செயல்படும் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடா்பான விசாரணையை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.

மாநிலத்தில் செயல்பட்டு வரும் 108 இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 84 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. அதில், விதிகளை மீறி செயல்பட்ட 17 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மாநில அரசு சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவற்றில் 4 நிறுவனங்கள் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், 6 நிறுவனங்களின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பின் சிறந்த உற்பத்தி நடைமுறை (ஜிஎம்பி) சான்றிதழ் தொடா்பான விதிகளும் மருந்துப் பொருள்கள் சான்றிதழ் விதிமுறைகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com