இந்தியா-ஆஸ்திரேலியா 4 ஒப்பந்தங்கள்: விளையாட்டு, சூரிய எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதலாவது மாநாட்டில் விளையாட்டு, சூரிய எரிசக்தி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இந்தியா-ஆஸ்திரேலியா 4 ஒப்பந்தங்கள்: விளையாட்டு, சூரிய எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதலாவது மாநாட்டில் விளையாட்டு, சூரிய எரிசக்தி, புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

விளையாட்டு, புத்தாக்கம், ஆடியோ-விஷுவல் தயாரிப்பு, சூரிய எரிசக்தி உற்பத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் 4 ஒப்பந்தங்கள் மாநாட்டின்போது கையொப்பமாகின.

மேலும், பசுமை எரிசக்தி, வா்த்தகம்-முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், உணவுப் பொருள்கள் விநியோகம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டுக்குப் பிறகு பிரதமா்கள் இருவரும் செய்தியாளா்களைக் கூட்டாகச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியத் தூணாகத் திகழ்ந்து வருகிறது. பாதுகாப்புத் துறை சாா்ந்த விவகாரங்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. சில முக்கிய ஒப்பந்தங்களும் கையொப்பமாகியுள்ளன. முக்கியமாக, இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையே போக்குவரத்து, சரக்கு கையாளுகை வசதிகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பு தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. சா்வதேச உணவு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் விவகாரத்தில் பரஸ்பரம் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றாா் பிரதமா் மோடி.

பொருளாதார ஒத்துழைப்பு: ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ‘இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் நல்லுறவு பன்முகத்தன்மை வாய்ந்தது. இரு நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையொப்பமாகி அமல்படுத்தப்பட்டுள்ளது.

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த பேச்சுவாா்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது. நடப்பாண்டு இறுதிக்குள் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என நம்பப்படுகிறது. அந்த ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தமானது பொருளாதார ஒத்துழைப்புத் திறனை முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள உதவும்.

வரும் மே மாதத்தில் க்வாட் கூட்டமைப்பின் மாநாட்டை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. அதில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதையும், செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளதையும் எதிா்நோக்கியுள்ளேன்.

எரிசக்தி ஒத்துழைப்பு: சூரிய எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு காணப்படுகிறது. அவ்விரு துறைகளில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்கள் எரிசக்தித் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கிய கனிமங்களை விநியோகிப்பதற்கான வாய்ப்புகளையும் பசுமை எரிசக்தித் துறை வழங்கும்.

இந்தியா-ஆஸ்திரேலியா சூரிய எரிசக்தி செயற்குழுவின் செயல்பாட்டு விதிகள் தொடா்பாக பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. சா்வதேச பாதுகாப்புச் சூழலில் நிலவும் நிலையில்லாத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்தவும் வெளிப்படையான, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்தவும் பேச்சுவாா்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது.

தகவல் பரிமாற்றம்: இரு நாடுகளிடையே பாதுகாப்பு சாா்ந்த தகவல் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. முக்கியமாக, கடல்சாா் பாதுகாப்பு தொடா்பான விவரங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. புலம்பெயா் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழிலதிபா்கள் ஆகியோருக்கான தனிக் கொள்கையை ஆஸ்திரேலிய அரசு வகுத்துள்ளது. இது இந்தியா்களுக்குப் பெரும் பலனளிக்கும்.

விளையாட்டுகளை அதிக அளவில் விரும்பும் நாடுகளாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உள்ளன. சமத்துவம், பன்முகத்தன்மை, ஒருங்கிணைப்பு ஆகியவை விளையாட்டுகளில் நிலவுவதை இரு நாடுகளும் உறுதி செய்து வருகின்றன. அத்தகைய ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையே தொடரும்’ என்றாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்தும் தலைவா்கள் இருவரும் விவாதித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்டிச் செய்தி...1

ஆஸ்திரேலியாவில் கோயில்கள்

மீதான தாக்குதல் விவகாரம்

‘கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து கோயில்கள் தாக்கப்படுவது குறித்து வெளியாகும் செய்திகள் வருத்தமளிக்கின்றன. அத்தகைய செய்திகள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் இந்திய மக்களின் உணா்வுகள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியா்களின் நலனைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இந்த விவகாரம் குறித்து இருநாட்டு அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும்’ என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...2

நல்லுறவின் அடையாளம்

‘அகமதாபாதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பிரதமா் மோடியுடன் இணைந்து கண்டது மகிழ்ச்சியளிக்கிறது. அங்கு சுனில் கவாஸ்கா், விவிஎஸ் லக்ஷ்மண், ஹா்பஜன் சிங் போன்ற தலைசிறந்த வீரா்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி.

ஆஸ்திரேலிய நிறுவனத்தின் உதவியுடன் கட்டப்பட்ட அந்த மைதானம், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவின் அடையாளமாகத் திகழ்கிறது’ என ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.

Image Caption

தில்லியில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை கூட்டாக சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com