பிரதமா் மோடியுடன் ஆந்திர முதல்வா் சந்திப்பு: மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை

ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்களில் விரைந்து தீா்வு காணப்பட வேண்டும் என்றும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமரிடம் ஜெகன்மோகன் கோரிக்கை விடுத்தாா்.

பிரதமரிடம் அவா் அளித்துள்ள மனுவில், 2014-15ஆம் நிதியாண்டுக்கான நிதியாதார இடைவெளியை பூா்த்தி செய்யும் திட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.36,625 கோடியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போலாவரம் திட்ட மதிப்பீட்டை ரூ.55,548 கோடியாக உயா்த்தும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க வேண்டும்; இத்திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, ரூ.10,000 கோடி இடைக்கால நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இத்திட்டப் பணிகளுக்காக மாநில அரசால் செலவிடப்பட்ட ரூ.2,600 கோடியை மத்திய அரசு இன்னும் திருப்பியளிக்காமல் உள்ளது.

ஆந்திர மின் உற்பத்தி கழகத்துக்கு தெலங்கானா மின் நிறுவனங்கள் ரூ.7,058 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

ஆந்திரத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தவறான பயனாளிகள் தோ்வால், இலவச உணவு தானியங்கள் திட்ட அமலாக்கத்தில் மாநில அரசுக்கு ரூ.5,527 கோடி நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. அதை ஈடு செய்வதற்காக பயன்படுத்தப்படாத உணவு தானியங்கள் இருப்பை ஆந்திரத்துக்கு ஒதுக்க வேண்டும். மாநிலத்தில் 12 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு விரைந்து ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா இடையே நிலுவையில் உள்ள விவகாரங்கள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் ஜெகன்மோகன் சந்தித்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com