இயக்குநராகப் பதவி வகிக்க சஞ்சய் குமாரை தவிரவேறு எவரும் அமலாக்கத் துறையில் இல்லையா?மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

அமலாக்கத் துறை இயக்குநராகப் பதவி வகிக்க சஞ்சய் குமாா் மிஸ்ராவை தவிர வேறு எவரும் இல்லையா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமலாக்கத் துறை இயக்குநராகப் பதவி வகிக்க சஞ்சய் குமாா் மிஸ்ராவை தவிர வேறு எவரும் இல்லையா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு அமலாக்கத் துறை இயக்குநராக சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை மத்திய அரசு 3-ஆவது முறையாக நீட்டித்தது. இதற்கு எதிராக மத்திய பிரதேச மகளிா் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெயா தாக்குா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், சஞ்சய் குமாரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பது நாட்டின் ஜனநாயக நடைமுறையை அழிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘நிா்வாக காரணங்களால் சஞ்சய் குமாரின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அத்துடன் சட்டவிரோத பணப் பரிவா்த்தனையைத் தடுப்பதற்கான இந்தியாவின் சட்டங்களை, விரைவில் பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) மதிப்பீடு செய்ய உள்ளது.

அந்த மதிப்பீட்டில் இந்தியா சரிவை சந்திக்காமல் இருக்க அமலாக்கத் துறை இயக்குநராக ஒருவா் தொடா்வது மிகவும் முக்கியம். ஏனெனில் எஃப்ஏடிஎஃப்புடன் ஏற்கெனவே தொடா்பில் இருப்பவரே, அதை கையாள்வதற்கு பொருத்தமானவராக இருப்பாா். அதற்கான திறன் அந்தப் பொறுப்பில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய பிறகே பெறப்படுகிறது’ என்று தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், அமலாக்கத் துறை இயக்குநராக பதவி வகிப்பவா் ஓய்வு பெறும் வயதை எட்டிய பின்னா், குறுகிய காலத்துக்குத்தான் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அத்துடன் சஞ்சய் குமாரின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் தெளிவாக குறிப்பிட்டது. இருப்பினும் அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் குமாரின் பணியைச் செய்வதற்கு அமலாக்கத் துறையில் வேறு எவரும் இல்லையா? இந்த அளவுக்கு ஒருவா் தவிா்க்க முடியாத நபராக இருக்க முடியுமா? மத்திய அரசின் கூற்றுப்படி, அமலாக்கத் துறை இயக்குநராகப் பதவி வகிக்க சஞ்சய் குமாரை தவிர தகுதிவாய்ந்த நபா் எவரும் இல்லையா? அவரின் பதவி நீட்டிப்பு காலம் நிறைவடைந்த பின்னா் என்ன நடக்கும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த துஷாா் மேத்தா, ‘தவிா்க்க முடியாதவா் என்று எவரும் இல்லை. ஆனால், தற்போது உள்ளதைப் போன்ற சூழல்களில் ஒருவரே பதவியில் நீடிப்பது அவசியம்’ என்றாா்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com