லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருவது நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி

புதிதாகக் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகளால் லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருவது நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி

லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து ‘பல் இல்லாத புலி’யாக மாறிவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார். 

லோக் ஆயுக்தா நாளை முன்னிட்டு புதன்கிழமை கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசியபோது இவ்வாறு கூறினார். 

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பேசியதாவது: “அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பு அவர்களின் பணிகளை சுதந்திரமாக செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவது அவசியம். புதிதாகக் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள் அல்லது சட்டத்திருத்தங்களின் மூலம் இந்த மகத்தான நிறுவனங்களை வலுவிழக்கச் செய்து ‘பல் இல்லாத புலி’யாக மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் இந்த நிறுவனங்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவை போதிய பலத்துடன் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும்.” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டத்தின் 14-வது பிரிவு மிகவும் சிறந்தது என்று கூறிய அவர், “ஒரு புகார் மீதான விசாரணைக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக லோக் ஆயுக்தா கருதினால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் அவர் வகித்த பதவியில் தொடரக்கூடாது என அறிவிக்க அதிகாரம் படைத்தது.” என்று பேசினார். 

கேரள லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்த கேரள அரசின் முடிவு பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும் கேரள மாநில சட்டப்பேரவையால் திருத்தப்பட்ட அம்சங்களில் பிரிவு 14 உள்ளது. இந்த மசோதா தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

இருப்பினும், இந்த குறிப்பிட்ட திருத்தம் குறித்து நீதிபதி நாகரத்னா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போதும், ஊழலில் ஈடுபடும்போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com