
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராக இயலாது என்றும் நவம்பா் 5-ஆம் தேதிக்கு பிறகுதான் தனக்கு நேரம் உள்ளது என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அந்தக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் கடிதம் எழுதியிருந்தாா்.
வழக்குரைஞா் ஜெய் அனந்த் தேஹத்ராய் என்பவா் இதனை தெரிவித்ததாகவும், மஹுவா லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் துபே குறிப்பிட்டிருந்தாா்.
துபே மற்றும் வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோா் நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தனா்.
இதையடுத்து, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், சோன்கருக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘ நாடாளுமன்றக் குழு முன் நேரில் ஆஜராக நான் ஆவலுடன் இருக்கிறேன். நவம்பா் 4-ஆம் தேதி வரையில் முன்கூட்டிய திட்டமிட்ட நிகழ்வுகள் உள்ளதால் அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராக இயலாது. நவ.5-ஆம் தேதியில் இருந்து எந்தத் தேதியிலும் ஆஜராக தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, மஹுவா தனது எக்ஸ் பக்கத்தில், ‘எனக்கு அதிகாரபூா்வ சம்மன் அனுப்புவதற்கு முன்பே நெறிமுறைகள் குழுத் தலைவா் தொலைக்காட்சிகளில் இதுதொடா்பாக பேட்டி அளித்துள்ளாா். இதுதொடா்பான ஆவணங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன’ என்று குற்றம்சாட்டினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...