கேரளத்தில் இருவர் மரணம்; நிபா வைரஸ் பாதிப்பா? - சுகாதாரத் துறை அமைச்சர் ஆலோசனை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. 
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் இன்று(செவ்வாய்க்கிழமை) உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. 

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒருவரும் நேற்று(செப். 11) ஒருவரும் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் இதில் ஒருவரின் உறவினர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். 

நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்பதால் உறுதி செய்வதற்காக உயிரிழந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு புணே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை சோதனை முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகும்பட்சத்தில் மாநில அரசு உடனடியாக அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், அண்டை மாநிலங்களும் இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

கடந்த 2018, 2021 ஆம் ஆண்டுகளில் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நிபா வைரஸ் 

பழம் தின்னும் வௌவால்கள் உடலில் இந்த வைரஸ்கள் உள்ளன. இது நேரடியாக வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், அவற்றின் கழிவுகள் மூலமாக அல்லது, அவை கடித்த பழங்களை உண்பதாலும் ஏற்படலாம்.

வௌவால்கள் மூலம் குதிரை, நாய், எலி, பூனை, பன்றி என பிற வீட்டு வளர்ப்பு - மனித தொடர்புடைய விலங்குகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன்மூலம் மனிதர்களுக்குப் பரவலாம். 

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து, அவருக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பரவலாம். நோயாளியின் உடல் திரவங்கள் (உமிழ் நீர், ரத்தம், சிறுநீர்) மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவலாம். 

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, அசதி, இருமல், குமட்டல்/வாந்தி, அதையடுத்து மூச்சுத்திணறல், அதிகபட்சமாக மூளை, சிறுமூளை, நரம்பு மண்டலப் பாதிப்புகளால் மரணம் கூட நேரிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com