திமிர்பிடித்த கூட்டணி: சனாதன சர்ச்சை குறித்து இந்தியா கூட்டணியை சாடிய பிரதமர் மோடி

திமிர்பிடித்த கூட்டணி சனாதன தர்மத்தை அழித்து நாட்டை மீண்டும் அடிமைத்தனத்திற்கு தள்ள விரும்புகிறது என்று பிரதமர்  நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
திமிர்பிடித்த கூட்டணி: சனாதன சர்ச்சை குறித்து இந்தியா கூட்டணியை சாடிய பிரதமர் மோடி


போபால்: சனாதனத்திற்கு எதிரான கருத்துகள் தொடர்பாக இந்திய கூட்டணியை தாக்கிப் பேசிய பிரதமர்  நரேந்திர மோடி, "திமிர்பிடித்த கூட்டணி" சனாதன தர்மத்தை அழித்து நாட்டை மீண்டும் அடிமைத்தனத்திற்கு தள்ள விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டம், பினா நகரில் சுமார் 51,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, சனாதன கருத்துக்கு எதிரான திமுக தலைவர்களின்  கருத்துகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணியை  கடுமையாகத் தாக்கிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து சனாதனிகளும் (சனாதன தர்ம விரும்பிகள்) மற்றும் நாட்டை நேசிக்கும் மக்களும்  சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் வடிவமைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை திமிர்பிடித்த கூட்டணி என்று குறிப்பிட்ட பிரதமர், ஒருபுறம் நமது நாடு உலக அரங்கில் விஸ்வ மித்ரனாக வளர்ந்து, ஒருங்கிணைக்கப்பட்ட ஒட்டுமொத்த உலகிற்கும் தனது வலிமையைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இந்தியாவில் சில அரசியல் கட்சிகள், நாடு மற்றும் சமூகத்தை சிதைப்பதில்  ஈடுபட்டுள்ளன.

தங்கள் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் இன்னமும் நிச்சயமற்ற நிலை இருந்தாலும், அண்மையில் மும்பையில் நடந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் திமிர்பிடித்த கூட்டணி தனது கொள்கை மற்றும் திட்டத்தில், இந்தியாவின் வளமான கலாசாரம் மற்றும் மத நம்பிக்கையைத் தகர்க்கும் ஒரு ரகசிய கொள்கையை வகுத்துள்ளது. இந்த கூட்டணி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டின் அடையாளமாகத் திகழும் ஒருங்கிணைத்த சிந்தனை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை அழிக்க நினைக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

“சனாதன தர்மம், தேவி அஹில்யா பாய் ஹோல்கர், ஜான்சி ராணி லக்ஷ்மி பாய், மகாத்மா காந்தி, லோகமான்ய திலகர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்தது, இப்போது திமிர்பிடித்த கூட்டணி அதே சனாதனத்தை அழிக்க விரும்புகிறது.

அதுபோல, அன்னை ஷப்ரியின் அடையாளமாக, மகரிஷி வால்மீகியின் அடிப்படையாக, சந்த் ரவிதாஸாரால் பிரதிபலிக்கப்பட்ட அதே சனாதனத்தை ஒழிக்க இந்த கூட்டணி விரும்புகிறது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கு மேடையில் இருந்தபோது கூட, மீண்டும் பாரத அன்னையின் மடியில் பிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் வகையில் சனாதனத்தின் சக்தி தூண்டியது, இப்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதே சனாதனத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது என்றும் மோடி பேசியுள்ளார்.

இப்போது இந்த எதிர்க்கட்சியின் கூட்டணி தலைவர்கள் சனாதன மதம், கலாசாரம் மற்றும் மரபுகளை நேரடியாகவே தாக்க ஆரம்பித்துள்ளனர். நாட்டை மீண்டும் ஆயிரம் வருட அடிமைத்தனத்திற்கு தள்ள சனாதனத்தை ஒழிக்க நினைக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள சனாதனிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவரும் கூட்டணியின் நோக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் உண்மையான தோற்றத்தைப் புரிந்து கொண்டு, அவர்களை கூட்டாக அழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முக்கியமாக, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்மையில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, காய்ச்சல் மற்றும் கரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தது மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை கிளப்பியது. சனாதன தர்மத்தை வெறுமனே எதிர்க்கக்கூடாது, ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

சனாதன தர்மம் குறித்து உதயநிதியின் பேச்சுக்கு எதிரான கருத்துகள் கடந்த வாரம் முதல் கடுமையாக எழுந்துவரும் நிலையில், பிரதமர் மோடி பகிரங்கமாக தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com