
ஆந்திரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்ய சாய் மாவட்டம் தர்மாவரம் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பிரசாத் (26) தனது நண்பருடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சுருண்டு விழுந்தார். அவர் உடனே தர்மாவரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விழாவின்போது இளைஞர்கள் நடனமாடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதுகுறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
— Telugu Scribe (@TeluguScribe) September 21, 2023
கடந்த மாதம் தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் 16 வயது மாணவி கல்லூரி விழாவில் நடனமாடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
நைலகொண்டனப்பள்ளியில் ஜூனியர் கல்லூரில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்தார்.
ஜூலை மாதம், கம்மத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சியின் போது 31 வயது இளைஞர் மாரடைப்பால் இறந்தார். ஜூன் மாதம், ஜக்தியால் நகரில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பால் இறந்தார். மார்ச் மாதம், ஆந்திர மாநிலம் பாபட்லாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
கரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...