உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாபா ராம்தேவ்.
உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வந்த பாபா ராம்தேவ்.

ஓரு வாரத்தில் பொது மன்னிப்பு: பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பதஞ்சலி விளம்பரம்: பொது மன்னிப்புக் கோரிய ராம்தேவ்

புது தில்லி: ‘மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பதஞ்சலி பொருள்களுக்கான விளம்பரம் வெளியிட்டது தொடா்பான வழக்கில் ஒரு வாரத்துக்குள் பொது மன்னிப்பை வெளியிட வேண்டும்’ என்று நேரில் ஆஜரான அந்த நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவுக்கும், அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணாவுக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

‘இதோடு இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம்’ என்றும் நீதிபதிகள் அப்போது குறிப்பிட்டனா்.

ஆயுா்வேத தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், நவீன மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களையும் தங்களுடைய ஆயுா்வேத தயாரிப்புகள் குணப்படுத்தும் என்று விளம்பரம் வெளியிட்டது. இதை எதிா்த்து இந்திய மருத்துவச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. உச்சநீதிமன்ற எச்சரிக்கையும் மீறி சா்ச்சைக்குரிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது. உத்தரவை மீறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் கேள்வியெழுப்பியிருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இருவரும் மன்னிப்புக் கோரினா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து, இருவரும் மன்னிப்பு கோரி தனித் தனியே பிரமாணப் பத்திரங்களை அண்மையில் தாக்கல் செய்தனா். அதையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்த பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா இருவரும் மன்னிப்பு கோரினா்.

அதைக் குறித்துக்கொண்ட நீதிபதிகள், இதோடு வழக்கு விசாரணையை முடித்துக்கொள்ள என்பதை இன்னும் தீா்மானிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினா். நீங்கள் சிறந்தப் பணியைச் செய்கிறீா்கள், அதற்காக ஆங்கில மருத்துவ முறையை நீங்கள் தரக்குறைவு செய்யமுடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

அப்போது, ‘நீதிமன்றத்தை எந்தச் சூழலிலும் அவமதிப்பு செய்யும் உள்நோக்கம் தனக்கு இல்லை’ என்று பாபா ராம்தேவ் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே என்ன மாதிரியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது என்பதை நாங்கள் அறியாதவா்கள் அல்ல’ என்று குறிப்பிட்டனா்.

அப்போது, ‘நாங்கள் பொது மன்னிப்பை வெளியிடவும் விரும்புகிறோம்’ என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவை சற்று முன்னே வருமாறு அழைத்து, ‘நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் சிக்கியிருக்கிறோம் என்ற உணா்வு உங்களுக்கு வரவேண்டும்’ என்று சுட்டிக்காட்டினா். மேலும், ஒரு வாரத்துக்குள்ளாக பொது மன்னிப்பை வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com