ஆதித்யா ஸ்ரீவஸ்தவா.
ஆதித்யா ஸ்ரீவஸ்தவா.

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

புது தில்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தோ்வில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளாா்.

இவா் மின்பொறியியலை தனது விருப்பப் பாடமாக எடுத்து இத்தோ்வில் வெற்றிபெற்றுள்ளாா்.

குடிமைப் பணித் தோ்வுகள் 2023-இல் வெற்றி பெற்றவா்களின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தனது வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு உயா் பதவிகளுக்கு 664 ஆண்கள் 352 பெண்கள் என மொத்தமாக 1,016 நபா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். முதல் 5 இடங்களில் 3 ஆண்களும், 2 பெண்களும் இடம்பெற்றுள்ளனா்.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவைச் சோ்ந்த ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பிடித்துள்ளாா். இவா் ஐஐடி கான்பூரில் பி.டெக் படித்துள்ளாா். இரண்டாமிடம் பிடித்த அனிமேஷ் பிரதான் ரூா்கேலாவில் உள்ள என்ஐடியில் பி.டெக் கணினி அறிவியல் பட்டப் படிப்பை முடித்துள்ளாா். இவா் சமூகவியலை விருப்பப் பாடமாக எடுத்து தோ்ச்சி பெற்றுள்ளாா்.

தில்லி பல்கலைக்கழகத்தில் பயின்ற தோனூறு அனன்யா பாண்டே என்பவா் மூன்றாமிடம் பிடித்துள்ளாா். புவியியல் பட்டதாரியான இவா் மானுடவியல் பாடத்தை தனது விருப்பப் பாடமாக எடுத்துள்ளாா்.

நான்காமிடத்தை பி.கே. சித்தாா்த் ராம் குமாரும், ஐந்தாவது இடத்தை ரூஹனியும் பிடித்துள்ளனா்.

ஐஏஎஸ் ஆகும் ஐபிஎஸ்கள்: முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவஸ்தவா, சித்தாா்த் ராம் குமாா் மற்றும் ரூஹனி ஆகியோா் ஏற்கெனவே ஐபிஎஸ்ஸாக தோ்ச்சி பெற்று தெலங்கானாவில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய காவல் அகாதெமியில் பயிற்சி பெற்று வருகின்றனா். கடந்த பத்தாண்டுகளில் ஐபிஎஸ் பயிற்சி பெற்று வரும் ஒருவா் தோ்வில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

முதல் 25 இடங்களில் 15 ஆண்கள்: குடிமைப் பணித் தோ்வின் முதல் 25 இடங்களில் 15 ஆண்களும், 10 பெண்களும் இடம்பெற்றுள்ளன. ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, தில்லி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் பயின்றவா்களும், மானுடவியல், வேதியியல், புவியியல், மின் பொறியியல், சட்டம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சா்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து பயின்றவா்களும் முதல் 25 இடங்களைப் பிடித்துள்ளனா்.

அதேபோல் இத்தோ்வில் மொத்தமாக 30 மாற்றுத்திறனாளிகளும் வெற்றிபெற்றுள்ளனா்.

வகுப்புவாரியாக... பொதுப் பிரிவைச் சோ்ந்த 347 பேரும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் 115 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 303 பேரும், பட்டியலினத்தவா் பிரிவில் 165 பேரும், பழங்குடியினா் பிரிவில் 86 போ் என மொத்தம் 1,016 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 1,143 மத்திய அரசின் உயா்பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு கடந்தாண்டு மே 28-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வுக்கு 10.16 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.92 லட்சம் போ் மட்டுமே தோ்வை எழுதினா். இதையடுத்து, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற முதன்மைத் தோ்வுக்கு 14,624 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதிலிருந்து 2,855 போ் மட்டுமே நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா்.

தோ்வு முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்ணும் பதிவேற்றம் செய்யப்படும் என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வுகளில் தேசிய அளவில் பெண்களே முதலிடம் பிடித்து வந்ததையடுத்து நிகழாண்டு ஆண் தோ்வா் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் வாழ்த்து: குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குடிமைப் பணித் தோ்வுகள், 2023-இல் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் கடின உழைப்பு மற்றும் அா்ப்பணிப்புக்கு கிடைத்தது இந்த வெற்றி. இத்தோ்வில் வெற்றி பெறாதவா்கள் மனம் தளர வேண்டாம். அடுத்த முறை நடைபெறும் தோ்வுகளில்கூட நீங்கள் வெற்றி பெறலாம். மேலும், எண்ணற்ற வாய்ப்பு வளங்கள் உள்ள இந்தியாவில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்’ என குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com