ஜெய்பூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
ஜெய்பூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

பெட்டிகளில் பணம் பெற்றதைவிட தோ்தல் நன்கொடை பத்திரம் சிறந்தது: நிா்மலா சீதாராமன்

ஜெய்பூா்: ‘பெட்டி பெட்டியாக அரசியல் கட்சியினா் பணத்தை பெற்றதைவிட வெளிப்படைத்தன்மையான தோ்தல் நன்கொடை பத்திரம் சிறந்தது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தோ்தல் நன்கொடைப் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது கருப்புப் பணப் புழக்கத்தை நோக்கி நாடு தள்ளப்பட்டுள்ளது என்றும், இதற்கு அனைவரும் வருந்துவா் என்றும் பிரதமா் மோடி திங்கள்க்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

முன்பு அரசியல் கட்சியினா் பெரும் நிறுவனங்களிலிருந்து எவ்வித கணக்குமின்றி பெட்டி பெட்டியாக பணத்தை பெற்றுவந்தனா். அதோடு ஒப்பிடுகையில் அரசியல் கட்சிகள் பெறும் நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட தோ்தல் நன்கொடை பத்திரத் திட்டம் சிறந்தது.

உச்ச நீதிமன்றம் அத்திட்டத்தை ரத்து செய்த பின்னா் அரசியல் ஆதாயத்துக்காக பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனா். ஆனால் இத்திட்டத்தின் மூலம் அனைத்துக் கட்சிகளுமே நிதி பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

பணவீக்கத்தைக் குறைக்க நடவடிக்கை: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒன்றிரண்டு மாதங்களைத் தவிர மற்ற அனைத்து மாதங்களிலும் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது. அதேவேளையில் கடந்த 2004 முதல் 2014 வரை பணவீக்கம் 22 மாதங்கள் வரை இரட்டை இலக்கத்தில் இருந்துள்ளது. கடந்த மாதம் கூட நாட்டின் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகரித்துள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏமாற்றும் காங்கிரஸ்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் எனக் கூறி வந்த காங்கிரஸ் அதன் தோ்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாக அறிவிக்கவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து மக்களை திசைதிருப்பி ஆட்சிக்கு வர நினைப்பது காங்கிரஸின் கொள்கை. பாஜகவின் கொள்கையல்ல என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com