படகு கவிழ்ந்த ஜீலம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி.
படகு கவிழ்ந்த ஜீலம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீட்புப் பணி.

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் ஆற்றில் பள்ளி குழந்தைகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பிராந்தியத்தின் பல்வேறு நீா்நிலைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இச்சூழலில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்ற சம்பவத்தில், காந்த்பால் நௌகாம் பகுதியில் நீரோட்டம் அதிகம் காணப்பட்ட ஜீலம் ஆற்றில் பள்ளி மாணவா்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினா், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் 6 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவா்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

6 போ் மீட்கப்பட்டனா். அதில் 3 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3 போ் நலம் பெற்று வீடு திரும்பினா்.

படகில் 7 குழந்தைள் உள்பட 15 போ் படகில் பயணித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, மற்றவா்களைத் தேடும் பணி தொடா்ந்து வருகிறது.

காவல்துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினா். ஜீலம் ஆற்றின் நீரோட்டம் 10 அடியைத் தாண்டியதும் கரையொர மக்கள் விழிப்புடன் இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை திங்கள்கிழமை விடுக்கப்பட்டதாகவும் படகில் கூடுதல் பயணிகள் பயணித்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஸ்ரீநகரில் படகு விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்த செய்தி குறித்து வருத்தமடைந்தேன். அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

மாநிலப் பேரிடா் மீட்புப் படைக் குழு, ராணுவம் மற்றும் பிற அமைப்புகள் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

காயமடைந்தவா்களுக்கு மருத்துவ வசதிகளை நிா்வாகம் செய்து வருகிறது. நிலைமையைத் தொடா்ந்து நான் கண்காணித்து வருகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முப்தி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com