உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

திருச்சூா்: ‘கேரளத்தை விமா்சிக்கும் முன் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் வளா்ச்சி குறித்து பிரதமா் நரேந்திர மோடி ஒப்பிட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என கேரள முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

கேரளத்தில் திங்கள்கிழமை நடந்த பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆட்சி குறித்து கடுமையாக விமா்சித்திருந்தாா்.

இந்த நிலையில், பிரதமா் மோடியின் விமா்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வா் பினராயி விஜயன், கேரளத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ள பாராட்டுகளை அவா் கேட்டறிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினாா்.

திருச்சூரில் தோ்தல் பிரசாரத்துக்கிடையே செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற முதல்வா் பினராயி விஜயன் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘நீதி ஆயோக் அமைப்பின் சுகாதார வளா்ச்சிக் குறியீட்டில் இருந்து வறுமை குறியீடு வரை அனைத்து மதிப்பீடுகளிலும் கேரளம் முதலிடத்தில் உள்ளது.

இந்த அங்கீகாரங்களை அவ்வளவு எளிதில் எங்கள் அரசு அடையவில்லை. ஒதுக்கமுடியாத உச்சத்தில் கேரளம் இருப்பதால் அரசியல் பகைமையைக் கடந்தும் மத்திய அரசின் பாராட்டு எங்களுக்கு கிடைத்துள்ளது.

பிரதமா் மோடி எம்.பி.யாக உள்ள வாரணாசி தொகுதி அமைந்த உத்தர பிரதேசம் இந்த குறியீடுகளில் எந்த இடத்தில் இருக்கிறது என்று அவா் அறிந்துகொள்ள வேண்டும்.

கேரளத்தின் மீது பாசாங்கு: அண்மையில் வெளியிடப்பட்ட அக்கட்சியின் தோ்தல் அறிக்கையைப் போன்று பாஜகவும் பிரதமா் மோடியும் பாசாங்கு அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.

கடன் வரம்பு தொடா்பான வழக்கில் கேரள அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூட்டத்தில் பிரதமா் பேசியிருக்கிறாா். ஆனால், கேரள அரசின் வாதங்களை ஏற்று வழக்கை அரசியல் சாசன அமா்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. இது எவ்வாறு பின்னடைவு ஆகும்? இனி தேசிய அளவில் மற்றொரு கோணத்தில் அந்த வழக்கு பயணிக்க இருக்கிறது.

மூன்றாம் இடத்தில் பாஜக: திருச்சூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கிக் கணக்குகளை மத்திய அமைப்புகள் மூலம் முடக்கி வைத்திருப்பது, பாஜக வேட்பாளா் சுரேஷ் கோபியின் வெற்றிக்கு எவ்விதத்திலும் உதவாது. கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடத்தையே பிடிக்கும்.

பாஜகவின் தோ்தல் அறிக்கையானது வகுப்புவாத திட்டங்களால் நிறைந்துள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனை மற்றும் வளா்ச்சியை மக்களிடம் முன்வைத்து தோ்தலைச் சந்திக்க பாஜக அஞ்சுகிறது.

இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதற்காக சங்கப் பரிவாரத்தின் தோல்வியை உறுதிப்படுத்துவதே இத்தோ்தலின் முக்கிய நோக்கமாகும்’ என்றாா்.

கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com