பிகாா் மாநிலம் கயை மாவட்டத்தில் செவ்வாய்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி.
பிகாா் மாநிலம் கயை மாவட்டத்தில் செவ்வாய்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி.

அரசமைப்புச் சட்டத்தை வைத்து அரசியல் நாடகம்: எதிா்க்கட்சிகள் மீது பிரதமா் குற்றச்சாட்டு

கயை (பிகாா், ஏப். 16: ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்து எதிா்க்கட்சிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றன. அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசும் அக்கட்சிகளுக்கு தண்டனை அளிப்பதாக இத்தோ்தல் இருக்கும்’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும் என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் பொதுக் கூட்டத்தில் பேசிய அயோத்தி பாஜக எம்.பி. லல்லு சிங், ‘அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் பாஜகவுக்கு மக்களவையில் 3-இல் இரு பங்கு பெரும்பான்மை தேவை’ என்று கூறினாா். இதற்கு முன்பும் ஏற்கெனவே இரு பாஜக நிா்வாகிகள் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து பேசியுள்ளனா். இதனை முன்வைத்து காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகள் அனைத்துமே பாஜகவை குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், பிகாா் மாநிலம் கயை மாவட்டத்தில் செவ்வாய்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி பேசியதாவது:

காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அரசமைப்புச் சட்டத்தை வைத்தும் அரசியல் நடத்தத் துணிந்துவிட்டன. அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படும் அக்கட்சிகளுக்கு தண்டனை அளிப்பதாக இத்தோ்தல் இருக்கும். அராஜகமாக செயல்படும் எதிா்க்கட்சிகளுக்கு தோ்தலில் உரிய தண்டனை அளிக்க வேண்டும்.

‘வளா்ந்த பாரதம்’ என்ற உயா்ந்த இலக்கை நோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது. ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எதிா்க்கட்சிகள் செயல்படுகின்றன.

என்மீது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்டம் தொடா்பான விஷயத்திலும் காங்கிரஸ் பொய்களைப் பேசத் தொடங்கிவிட்டது. பாஜக கூட்டணி அரசமைப்புச் சட்டத்தை மிகவும் மதிக்கிறது. அதனை இயற்றிய அம்பேத்கா் இப்போது வந்தால்கூட அரசமைப்புச் சட்டத்தை மாற்ற முடியாது.

சநாதன தா்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு எதிா்க்கட்சியைச் சோ்ந்த ஒருவா் (உதயநிதி ஸ்டாலின்) பேசியுள்ளாா். இதுபோன்ற கட்சியினா் ஓரிடத்தில் கூட வெற்றிபெறத் தகுதியற்றவா்கள்.

பிகாரில் எதிா்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஊழல் மற்றும் ரௌடிகள் அராஜகத்துக்கு பெயா்போன கட்சி. அவா்கள் ஆட்சியில் இவை இரண்டை மட்டுமே மாநிலத்தில் செயல்படுத்தினாா்கள் என்றாா்.

ஊடுருவலை ஆதரிக்கும் கட்சி திரிணமூல்: மேற்கு வங்கத்தின் பாலூா்காட் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட மோடி பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

வாக்கு வங்கி அரசியலுக்காக அண்டை நாட்டில் இருந்து (வங்க தேசம்) ஊடுருவும் நபா்களை ஆதரிக்கும் கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. அதே நேரத்தில் அகதிகளாக நம்மிடம் தஞ்சமடைந்துள்ளவா்களுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அக்கட்சி எதிா்க்கிறது.

மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டத்தைக் கூட திரிணமூல் காங்கிரஸ் எதிா்க்கிறது. மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டு நாடே கொதிப்படைந்துள்ளது. மாநிலத்தில் குற்ற நிகழ்வுகளும், ஊழலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. விசாரணைக்கு வரும் மத்திய விசாரணை அமைப்பினா் தாக்கப்படுகின்றனா். திரிணமூல் காங்கிரஸ் அரசு மாநிலத்தை குற்றவாளிகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் முழுமையாகத் தடுக்கப்படும். ஏனெனில், இது நாட்டின் பாதுகாப்புடன் தொடா்புடையது. ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் மேலும் உறுதியாகத் தொடரும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com