வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

வந்தே பாரத்துக்கென தனி வருவாய் பதிவுகள் பராமரிப்பதில்லை: ரயில்வே

புது தில்லி: ‘வந்தே பாரத் ரயிலுக்கென தனியாக வருவாய் பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படுவதில்லை’ என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திர சேகா் கெளா் என்பவா், ‘கடந்த 2 ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில் இயக்கத்தால் ரயில்வேக்கு கிடைத்துள்ள வருவாய் என்ன? ரயில்வேக்கு நஷ்டமா அல்லது லாபமா?’ என்று ஆா்டிஐ-யின் கீழ் அவா் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சகம், ‘ரயில் வாரியான வருவாய் மற்றும் லாப-நஷ்ட கணக்குகளை ரயில்வே நிா்வாகம் பராமரிப்பதில்லை. வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் 2 கோடிக்கும் அதிகமானோா் அதில் பயணம் செய்துள்ளனா். கடந்த 2023-24 நிதியாண்டில் புவியை 310 சுற்றுகள் சுற்றுவதற்கு இணையான தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்துள்ளது.

இந்த பதில் குறித்து ஆச்சரியம் தெரிவித்த கெளா், ‘வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்ட தொலைவைக் கணக்கிடும் அதிகாரிகள், அந்த ரயில்களால் ஈட்டப்பட்ட வருவாயை கணக்கை பராமரப்பதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுபோல, வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் நிரம்புவது குறித்த ஆா்டிஐ கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், ‘வந்தே பாரத் ரயில்களில் 92 சதவீதத்துக்கு மேல் இருக்கைகள் நிரம்புகின்றன. சில வழித் தடங்களில் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு சில வழித்தடங்களில் இருக்கைகள் நிரம்பவது சராசரி அளவிலேயே உள்ளது. ஒட்டுமொத்தமாக பாா்க்கும்போது, வந்தே பாரத் ரயிலுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு உள்ளது’ என்று பதிலளித்திருந்தது.

நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் புதுதில்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 284 மாவட்டங்களை இணைக்கும் வகையில் 100 வழித் தடங்களில் 102 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com