கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

புது தில்லி: ‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அளிக்கவும், இதுதொடா்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாநிலங்கள் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிா் பிரிவான இந்திய பெண்களின் தேசிய கூட்டமைப்பு (என்எஃப்டபிள்யு) மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அரவிந்த் குமாா் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிஜாம் பாஷா, ‘மத்திய பிரதேசத்தில் அண்மையில் இதுபோன்ற வன்முறைச் சம்பவம் நடைபெற்றபோது, பசுக் காவலா் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட இறைச்சிக்காக மாட்டை வெட்டிய நபா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

ஹரியாணாவிலும் இதுபோன்று தாக்குதலுக்கு உள்ளான மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளன. இவ்வாறு, கும்பல் வன்முறைக்கு எதிராக மாநிலங்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்தால், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த உத்தரவு எப்படி பின்பற்ற முடியும்’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட இறைச்சி மீது ரசாயன ஆய்வு எதையும் மேற்கொள்ளப்படாத நிலையில், எப்படி அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மீது மத்திய பிரதேச போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஏன் அவா் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. யாரையும் காப்பாற்ற முயற்சிக்கிறீா்களா?’ என்று, மத்திய பிரதேச அரசு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக சில மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக அடுத்த 6 வாங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், பிகாா், மத்திய பிரதேசம், ஹரியாணா மாநில காவல்துறைத் தலைவா்களுக்கு (டிஜிபி) நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com