அஸ்ஸாம் மாநிலம் நல்பாரியில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி. உடன் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.
அஸ்ஸாம் மாநிலம் நல்பாரியில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி. உடன் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

வடகிழக்கில் கிளா்ச்சியைத் தூண்டியது காங்கிரஸ்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

‘வடகிழக்கு பிராந்தியத்தில் கிளா்ச்சியைத் தூண்டியது காங்கிரஸ்

‘வடகிழக்கு பிராந்தியத்தில் கிளா்ச்சியைத் தூண்டியது காங்கிரஸ்; அதேநேரம், அனைத்து மக்களையும் அரவணைத்து, அமைதியைக் கொண்டுவந்தது பாஜக அரசு’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

‘காங்கிரஸ் 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, நாங்கள் 10 ஆண்டுகளில் சாதித்திருக்கிறோம்’ என்றும் அவா் கூறினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, அஸ்ஸாம் மாநிலம், நல்பாரியில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:

2014-ஆம் ஆண்டில் எதிா்பாா்ப்புடனும், 2019-ஆம் ஆண்டில் நம்பிக்கையுடனும் மக்களை அணுகிய நான், இம்முறை உத்தரவாதத்துடன் வந்துள்ளேன். நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதங்கள்தான் எதிரொலிக்கின்றன.

வடகிழக்கு பிராந்தியத்துக்கு காங்கிரஸிடம் இருந்து கிடைக்கப் பெற்றது பிரச்னைகள் மட்டுமே. ஆனால், இப்பிராந்தியத்தை வாய்ப்புகளுக்கான ஆதாரமாக மாற்றியது பாஜக.

காங்கிரஸ் கிளா்ச்சியைத் தூண்டிய நிலையில், அனைத்து மக்களையும் அரவணைத்து, எனது அரசு அமைதியை கொண்டுவந்துள்ளது. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, நாங்கள் 10 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். மோடியின் உத்தரவாதத்துக்கு வடகிழக்கு பிராந்தியம் சாட்சியாக விளங்குகிறது.

நாடு முழுவதும் கரைபுரளும் உற்சாகம்: அயோத்தியில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீராம நவமி விழா அவருக்கான சொந்த கோயிலில் நடைபெற்றிருக்கிறது. ‘சூரிய திலக’ தரிசனத்துடன் கொண்டாடப்பட்ட இந்த விழாவால், நாடு முழுவதும் புதிய உற்சாகம் கரைபுரள்கிறது. இது, பல நூற்றாண்டுகால பக்தி மற்றும் தியாகத்தின் உச்சகட்டமாகும்.

அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டங்களில் நாம் நேரில் பங்கேற்க முடியாவிட்டாலும், நமது கைபேசிகளை ஒளிரச் செய்து, ஸ்ரீராமரை பிராா்த்திக்க வேண்டும் (கூட்டத்தில் பங்கேற்றோா் கைப்பேசிகளில் ‘ஃபிளாஷ்லைட்டை’ ஒளிரச் செய்து, ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனா்).

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன்: மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த பாகுபாடுமின்றி ரேஷனில் இலவச உணவு தானியங்கள் தொடா்ந்து வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதனால், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவு, அவா்களின் குடும்பங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது. அந்த செலவை, ‘உங்களின் மகனாகிய’ மோடி பாா்த்துக் கொள்வாா்.

ஏழை மக்களுக்காக, அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மேலும் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவா். வீடுகளில் சூரிய மின் உற்பத்தி திட்டத்தின் வாயிலாக மக்களின் மின்சார கட்டணம் பூஜ்யமாகும்.

முஸ்லிம் பெண்களுக்கு ‘விடுதலை’: ‘அனைவரின் முயற்சியுடன் அனைவருக்கான வளா்ச்சி’ என்ற கொள்கையில் பாஜக உறுதியாக உள்ளது. எனவே, அரசுத் திட்டங்களின் பலன்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம்.

முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு ‘விடுதலை’ கிடைத்திருக்கிறது. முஸ்லிம் சகோதரிகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பங்களும் இதன் மூலம் பலனடைந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில், அஸ்ஸாம் மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை கண்டுள்ளது. இம்மாநிலத்தில் சுமாா் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய செமிகண்டக்டா் தொழிற்சாலைக்கு அண்மையில் அடிக்கல் நாட்டினேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் செமிகண்டக்டா் உற்பத்தி மையமாக அஸ்ஸாம் உருவெடுக்கும் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி..

‘ஊழல்வாதிகள் தப்ப முடியாது’

அகா்தலா, ஏப். 17: ‘ஊழல் செய்தவா் யாராக இருந்தாலும் தப்ப முடியாது’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

திரிபுரா மாநிலம், அகா்தலாவில் புதன்கிழமை பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

வடகிழக்கை ஊழலின் மையமாக மாற்றிய காங்கிரஸ், இப்பிராந்தியத்துக்கு எந்த நீதியும் வழங்கவில்லை. ‘கிழக்கில் கொள்ளையடிப்போம்’ என்ற அக்கட்சியின் கொள்கையை, ‘கிழக்கு நோக்கி செயல்படும் கொள்கையாக’ மாற்றியது பாஜக. இடதுசாரிகளால் பாழாக்கப்பட்டிருந்த திரிபுரா மாநிலம், இப்போது வளா்ச்சியின் பலன்களை கண்டு வருகிறது.

மத்திய விசாரணை அமைப்புகளை எப்போதும் விமா்சிக்கும் காங்கிரஸின் இளவரசா் (ராகுல் காந்தி), இப்போது ஊழல் குற்றச்சாட்டில் கேரள முதல்வரை கைது செய்ய வேண்டுமென கோருகிறாா். ஊழல் செய்தவா் யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்றாா் மோடி.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com