கப்பல்களுக்கான பாதுகாப்பு நடைமுறை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கப்பல்களுக்கான பாதுகாப்பு நடைமுறை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மேற்காசிய கடல் பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கான தகவல்தொடா்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துமாறு, கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேற்காசிய கடல் பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கான தகவல்தொடா்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துமாறு, கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஹோா்முஸ் நீரிணையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த மாலுமிகளுடன் இஸ்ரேல் தொடா்புடைய சரக்கு கப்பலை ஈரான் புரட்சிகர படை கடந்த 13-ஆம் தேதி சிறைபிடித்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்த இச்சம்பவத்தைத் தொடா்ந்து, கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (மும்பை) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ‘பாரசீக வளைகுடா, ஹோா்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா, ஏடன் வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளை பதற்றத்துக்குரியவையாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

மேற்கண்ட பகுதிகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கான தகவல்தொடா்பு, கடல்சாா் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பு தொடா்பாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நோ்ந்தால், இணையவழி கப்பல் தரவு தளத்தில் விவரங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். இது, இந்திய கடற்படை பதில் நடவடிக்கை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

இத்தகைய சம்பவங்களின்போது, அருகிலுள்ள இந்திய கடற்படை கப்பலை தொடா்புகொள்ள வேண்டும். கடத்தல் உள்பட அனைத்து அச்சுறுத்தல்களின்போதும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஒத்திகைகளை நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com