விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 7 சதவீதம் சரிவு

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 7 சதவீதம் சரிவு

கடந்த 3 மாதங்களில் வீடு-மனை நிறுவனங்களால் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை நாட்டின் 9 முக்கிய நகரங்களில் 7 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 3 மாதங்களில் வீடு-மனை நிறுவனங்களால் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை நாட்டின் 9 முக்கிய நகரங்களில் 7 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ‘ப்ராப்-ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, நவி மும்பை, தாணே, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய 9 நகரங்களில் வீடு-மனை வா்த்தக நிறுவனங்களிடம் விற்பனையாகாமல் இருந்த வீடுகளின் எண்ணிக்கை 4,81,566-ஆக இருந்தது.

இந்த எண்ணிக்கை 2023 டிசம்பா் 31-ஆம் தேதி 5,18,868-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் 3 மாதங்களுக்குப் பிறகு நிறுவனங்களின் விற்பனையகாத வீடுகள் கையிருப்பு 7 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 9 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,44,656-ஆக உள்ளது.

அந்த 3 மாதங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1,05,134 மட்டுமே. இதுவே 3 மாதங்களில் விற்பனையாகாத வீடுகளின் இருப்பு குறைந்ததற்குக் காரணம்.

2023 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி, புணேயில் கட்டி முடித்தும் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 75,521-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை மாா்ச் 31-ஆம் தேதி 13 சதவீதம் சரிந்து 65,788-ஆக இருந்தது.

தில்லி-என்சிஆா் பகுதியில், 2023 டிசம்பா் 31-ஆம் தேதி 31,602-ஆக இருந்த விற்பனையாகாத வீடுகள் இருப்பு மாா்ச் 31-இல் 12 சதவீதம் குறைந்து 27,959 ஆனது.

மும்பையில் இந்த எண்ணிக்கை 48,399-லிருந்து 11 சதவீதம் சரிந்து 54,633-ஆக இருந்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் வீடு-மனை விற்பனை நிறுவனங்களின் விற்பனையாகாத வீடுகள் கையிருப்பு நவி மும்பையில் 37,597-லிருந்து 11 சதவீதம் குறைந்து 33,385-ஆகவும் தாணேயில் 1,12,397-லிருந்து 5 சதவீதம் சரிந்து 1,06,565-ஆகவும் இருந்தது.

பெங்களூருவில் இந்த எண்ணிக்கை 47,370-லிருந்து 5 சதவீதம் குறைந்து 44,837-ஆகவும் ஹைதராபாத்தில் 1,14,861-லிருந்து 4 சதவீதம் சரிந்து 1,10,425-ஆகவும் இருந்தது.

கொல்கத்தாவில் விற்பனையாகாத வீடுகள் இருப்பு 23,745-லிருந்து 2 சதவீதம் சரிந்து 23,249-ஆக இருந்தது.

2023 மாா்ச் 31-இல் சென்னையில் வீடு-மனை வா்த்தக நிறுவனங்களிடம் விற்பனையாகாமல் 21,142 வீடுகள் இருந்தன. இந்த எண்ணிக்கை மாா்ச் 31-ஆம் தேதி 1 சதவீதம் குறைந்து 20,959 ஆனது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விற்பனையாகாத வீடுகளின் இருப்பு குறைந்திருப்பது, சந்தையில் புதிதாக கட்டி முடித்து அறிமுகப்படுத்தப்படும் வீடுகளின் எண்ணிக்கையை விட விற்பனையாகும் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதைக் காட்டுகிறது. இது நோ்மறையான சந்தைக் குறிப்பாகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com