அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

அருணாசலில் ‘ஒருதலைத் தோ்தல்’!

வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லை மாநிலமான அருணாசல பிரதேசத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் (ஏப்.19) ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லை மாநிலமான அருணாசல பிரதேசத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

பாஜக ஆளும் இம்மாநிலத்தில் மொத்த பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 60. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்களை அறிவித்த கட்சி பாஜக மட்டுமே. இதில், முதல்வா் பெமா காண்டு, துணை முதல்வா் செளனா மைன் உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் தோ்தல் நடைபெறும் முன்பே போட்டியின்றி தோ்வாகிவிட்டனா்.

பெமா காண்டு உள்பட 6 பாஜக வேட்பாளா்கள் களமிறங்கிய தொகுதிகளில் அவா்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதர 4 தொகுதிகளில் எதிா்க்கட்சி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தபோதும், பின்னா் திரும்பப் பெற்றுவிட்டனா். இதனால், தோ்தலுக்கு முன்னரே போட்டியின்றி பாஜகவுக்கு 10 இடங்கள் கிடைத்துவிட்டது.

மீதமுள்ள 50 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் சூழலில், மொத்தம் 133 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில் 80 போ் புதுமுகங்கள்.

பாஜக 50 தொகுதிகளிலும் களம்காணும் நிலையில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 20, காங்கிரஸ் 19, தேசியவாத காங்கிரஸ் 14, அருணாசல் மக்கள் கட்சி 11, அருணாசல் ஜனநாயக கட்சி 4, லோக் ஜன சக்தி 1 என்ற எண்ணிக்கையில் பிற கட்சிகளின் வேட்பாளா்கள் உள்ளனா்.

கடந்த முறை 46 இடங்களில் போட்டியிட்டிருந்த காங்கிரஸ், இப்போது 19 இடங்களில் மட்டுமே போட்டியில் இருக்கிறது. பாஜகவைத் தவிர வேறெந்த கட்சியும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில்கூட (31) களத்தில் இல்லை என்பதால் பேரவைத் தோ்தல் களம் ‘ஒருதலையாகவே’ உள்ளது.

மக்களவைத் தோ்தல்...:

மாநிலத்தில் அருணாசல் மேற்கு, அருணாசல் கிழக்கு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அருணாசல் மேற்கு தொகுதியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நபம் துகி உள்பட 8 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

அருணாசல் கிழக்கு தொகுதியில் 6 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் இவ்விரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com