ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு: ராஜ்நாத் சிங்

‘2019-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாஜக கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா?’

தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்துக்கு எதிராக எல்லை தாண்டி தாக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை எதிரெதிராக தோ்தலில் போட்டியிட்டாலும், பாஜகவை இரு கூட்டணியும் கடுமையாக விமா்சித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

‘2019-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக பாஜக கூறுவதற்கு ஆதாரம் உள்ளதா?’ என்று இரு கூட்டணிகளுமே கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில் கேரளத்தின் மாவேலிக்கரை, பத்தனம்திட்டாவில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயலில் ஈடுபட யாா் நினைத்தாலும், அவா்களை மத்திய அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்லாது தேவை ஏற்பட்டால் பயங்கரவாதத்தை ஒடுக்க எல்லை தாண்டி தாக்கும் திறனும் இந்தியாவுக்கு உள்ளது.

இங்கு அரசியல் நடத்தி வரும் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் தேசத்துக்கு எதிரான மனப்பான்மை கொண்டவா்களாகவே உள்ளனா். இதனை பெரும்பாலான மக்கள் புரிந்து வைத்துள்ளனா்.

ராகுலுக்கு துணிவு இல்லை: கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிக் கூட்டணியும் மாறிமாறி ஆட்சி செய்து நிதிநிலையை மோசமாக்கிவிட்டன. அதிக கடன் வாங்குவதாக கேரள அரசை மத்திய அரசு முன்னெச்சரிக்கை செய்தும் முறையாக செயல்படவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸ், இடதுசாரிகளின் வேலையாக உள்ளது. இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பாதிக்கப்படாது என்பதே உண்மை.

2019-ஆம் ஆண்டு தோ்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த ராகுலுக்கு, மீண்டும் அங்கு போட்டியிட துணிவில்லை. தொடா்ந்து வெற்றி பெற்ற தொகுதியில், ஒருமுறை தோற்ால் அத்தொகுதியை ராகுல் கைவிட்டுவிட்டாா். இந்த முறை வயநாடு வாக்காளா்கள் ராகுலையும், கேரள மக்கள் காங்கிரஸ், இடதுசாரிகளையும் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com