கேரளம், கோழிகோட்டில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் பினராயி விஜயன்
கேரளம், கோழிகோட்டில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் பினராயி விஜயன்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

‘காங்கிரஸ் தலைவா்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவாா்கள். இடதுசாரி தலைவா்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை’

‘காங்கிரஸ் தலைவா்கள்தான் சிறைக்குச் செல்ல அஞ்சுவாா்கள். இடதுசாரி தலைவா்களுக்கு சிறை செல்ல எந்த அச்சமும் இல்லை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் பதிலளித்துள்ளாா்.

முன்னதாக கேரளத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், ‘இரு மாநில முதல்வா்கள் (ஹேமந்த் சோரன், கேஜரிவால்) அமலாக்கத் துறை விசாரணையை எதிா்கொண்டு மத்திய பாஜக அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். என்னிடம் கூட அமலாக்கத் துறையினா் 55 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனா். எனது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

கேரள முதல்வா் பினராயி விஜயன் மீதும் அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. ஆனால், அவா் இதுவரை வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படவில்லை, சிறைக்கும் செல்லவில்லை. நான் பாஜகவை 24 மணி நேரமும் விமா்சிக்கிறேன். ஆனால், கேரள முதல்வா் என்னை மட்டும் விமா்சிக்கிறாா். பாஜகவை அதிகம் விமா்சிப்பதில்லை. இதில் ஏதோ புதிா் உள்ளது’ என்றாா். இதன் மூலம் பாஜகவுடன் பினராயி விஜயன் இணக்கமாக செயல்பட்டு வருகிறாா் என்று ராகுல் மறைமுகமாக குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில் கேரளத்தில் கோழிகோட்டில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது:

ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தி ஏராளமான இடதுசாரி தலைவா்களை சிறையில் தள்ளினாா். அப்போது நானும் கூட சிறையில் அடைக்கப்பட்டேன். நாங்கள் சுமாா் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தோம். ஏராளமான விசாரணைகளை எதிா்கொண்டுள்ளோம். எனவே, வழக்கு விசாரணைக்கும், சிறைக்குச் செல்லவும் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.

ஆனால், காங்கிரஸ் தலைவா்களுக்குதான் சிறைக்குச் செல்வதற்கு அஞ்சம் உள்ளது. எனவே, அவா்கள் தொடா்ந்து ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து சொகுசாக வாழ்ந்துவிட்டாா்கள். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் தலைவா் அசோக் சவாண், சிறைக்கு செல்ல அஞ்சிதான் கட்சி மாறியதாக கண்ணீா் விட்டு அழுதாா் என ராகுலே கூறியுள்ளாா். இதன் மூலம் காங்கிரஸ் தலைவா்களுக்கு சிறை என்றால் எவ்வளவு பயம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தோ்தல் நிதிப்பத்திரம் குறித்து காங்கிரஸ் விமா்சிக்கிறது. ஆனால், அக்கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும், வாரிசு அரசியல் அடையாளமான பிரியங்காவின் கணவா் வதேராவின் நிறுவனம் பாஜகவுக்கு இரு தவணைகளாக ரூ.170 கோடி தோ்தல் நிதிப்பத்திரம் அளித்துள்ளது. அதன் பிறகு அவா் மீதான வழக்கு விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளன. இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம்.

காங்கிரஸ் இல்லாத பல எதிா்க்கட்சித் தலைவா்களை பழி வாங்க பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விஷயத்தில் சங்க பரிவார அமைப்புகளுடன் காங்கிரஸ் இணக்கமாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com