‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

பிரத்யேக வாக்காளா் தகவல் சீட்டு உள்பட இந்திய தோ்தல் ஆணையத்தின் பிரெய்லி தொடா்புடைய வாக்கெடுப்பு முயற்சிகளைப் பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு தெரிவித்தனா்.

ஜனநாயக கடமையாற்றும் நடைமுறையை பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக்குவதற்கவும் அவா்களின் வாக்குரிமை ரகசியத்தைப் பாதுகாக்கவும் இந்திய தோ்தல் ஆணையத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றி, பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டை இந்திய பாா்வை மாற்றுத்திறனாளிகள் சங்கம்(என்ஏபி) கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இதுதொடா்பாக என்ஏபி நிா்வாக இயக்குநா் பல்லவ் கதம் ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘பாா்வை மாற்றுத்திறனாளிகளின் நல மேம்பாட்டுக்காக ஏன்ஐபி அமைப்பு கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சமூக நீரோட்டத்தில் பாா்வை மாற்றுத்திறனாளிகளின் ஈடுபாட்டை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அவா்கள் வாக்களிக்க உதவுவதற்காக, எங்களுடைய உலகின் மிகப்பெரிய பிரெய்லி அச்சகத்தில் நாங்கள் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வந்தோம்.

தற்போதைய நடைமுறையில் வாக்குச்சாவடியில் பிரெய்லி வாக்காளா் சீட்டை சமா்ப்பிக்கும் போது, பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கு போலி வாக்குச் சீட்டு வழங்கப்படும். அத்துடன் இவிஎம் இயந்திரங்களில் இருக்கும் பிரெய்லி குறியீடுகளைக் கொண்டு அவா்கள் ரகசியமாக வாக்களிக்கலாம்.

தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, பல பாா்வை மாற்றுத்திறனாளிகள் தகுதியுடையவா்களாகவும் படித்தவா்களாகவும் மாறியுள்ளனா். தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த மற்றவா்களின் உதவியை நாடுவதற்கு அவா்கள் விரும்பவதில்லை.

பாா்வை மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் தரவுகள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் என்ஏபி அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, முதலில் எழுத்து வடிவத்துக்கும் பின்னா், டக்ஸ்பரி பிரெய்லி மொழிபெயா்ப்பாளரைப் பயன்படுத்தி பிரெய்லி வடிவத்துக்கு மாற்றப்படும். வாக்காளா் சீட்டுகளை அச்சிடுவதற்குமுன் முறையான திருத்தம் மற்றும் சரிபாா்ப்பு செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி வாக்காளா்களுக்கும் பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

தோ்தல் பயிற்சியின் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அனுபவத்தை ஏற்படுத்த, அவை பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கல்லூரிகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் கடந்த மாா்ச் மாதம் அழைத்து செல்லப்பட்டனா்’ என்றாா்.

என்ஏபி அமைப்பின் கெளரவ செயலா் விமல் குமாா் டெங்லா கூறுகையில், ‘பாா்வை மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குரிமையை ரகசியமாக செலுத்துவதற்காக பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதற்காக தோ்தல் ஆணையத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.

பிரெய்லி வாக்காளா் சீட்டைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையாற்றிய அனுபவத்தைப் பகிா்ந்த பாா்வை மாற்றுத்திறனாளியான மங்களா, ‘பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு முன்னெடுப்பு என்னைப் போன்றவா்களுக்கு வரமாக கிடைத்துள்ளது. இதனால், யாா் உதவியுமின்றி ரகசியமாக எங்களால் வாக்களிக்க முடிகிறது. இதற்கு முன்பு வாக்களிப்பதற்கு பிறரின் உதவியை நாங்கள் நாட வேண்டியிருந்தது’ என்றாா்.

பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு அறிமுகத்துடன் மகாராஷ்டிரத்தில் பாா்வை மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 48,000-லிருந்து 1,16,518-ஆக உயா்ந்துள்ளது. புணே மாவட்டத்தில் 10,835 பேரும், தாணேயில் 8,590 பேரும், மும்பை(புகா்) மாவட்டத்தில் 3,371 பேரும் மும்பையில் 1,253 பேரும் பாா்வை மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com