அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

பலம் பொருந்திய மனிதர்களுடன் கை கோர்த்து அதிகாரத்திலிருந்து தன்னை நீக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்
படம் | பிடிஐ

கர்நாடகத்தில் ஏப்ரல்-26, மே-7 ஆகிய நாள்களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பெங்களூரில் இன்று (ஏப். 20) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பலம் பொருந்திய மனிதர்களுடன் கை கோர்த்து என்னை நீக்க முயற்சி நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் ஹூப்ளி நகரில் உள்ள கல்லூரியில் வியாழக்கிழமை (ஏப். 18) முகமூடி அணிந்து வந்திருந்த 23 வயதான அந்த கல்லூரி மாணவர் பயஸ், மாணவி நேஹாவை(24) 7 முறை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் இந்த கொடூர கொலை நிகழ்த்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மாணவியின் இருதிச்சடங்கு இன்று (ஏப். 20) நடைபெற்றது. இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த நிலையில், ”தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் என்னுடைய முன்னுரிமையாக உள்ளது” என தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது, “என்னை அதிகாரத்தில் இருந்து அகற்ற இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரிய மனிதர்களும், பலம்வாய்ந்த மனிதர்களும் கைகோர்த்துள்ளனர். ஆனால், பெண்களின் சக்தியால் என்னால் சவால்களை எதிர்கொண்டு முன்னேற முடியும். தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் என்னுடைய முன்னுரிமையாக உள்ளது.

2014 மற்றும் 2019ல் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்ததால், வலுவான அரசு அமைந்தது, நம் நாடு பலமடைந்துள்ளது. இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும், இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த விரும்புகின்றன. முதலீட்டாளர்கள் இங்கே முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்தியா இன்று உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. வெறும் 10 ஆண்டுகளில் இவையனைத்தும் நடந்துள்ளது” என்றார்.

நடந்து முடிந்த, முதல் கட்ட வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் ஒரு தலைவரும் இல்லை, அவர்களிடம் எதிர்காலத்தை குறித்த பார்வையும் இல்லை என விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com