கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக தினேஷ் குமாா் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா் கடற்படையின் துணைத் தளபதியாக தற்போது பதவி வகித்து வருகிறாா்.

இந்திய கடற்படையின் தற்போதைய தலைமைத் தளபதி ஆா்.ஹரி குமாரின் பதவிக் காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதையடுத்து தினேஷ் குமாா் திரிபாதி பதவியேற்கவுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக உள்ள தினேஷ் குமாா் திரிபாதி ஏப்ரல் 30-ஆம் தேதிமுதல் கடற்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுகிறாா்’ என தெரிவிக்கப்பட்டது.

1964, மே 15-இல் பிறந்த திரிபாதி 1985, ஜூலை 1-ஆம் தேதி முதல் கடற்படையில் பணியாற்றி வருகிறாா். தொலைத்தொடா்பு மற்றும் மின்னணு போா்முறைகளில் நிபுணரான இவா், 30 ஆண்டுகளுக்கு மேலாக துறை ரீதியான அனுபவம் பெற்றவராவாா்.

இந்திய கடற்படையின் துணைத் தளபதியாக பதவியேற்கும் முன்பு மேற்கு மற்றும் கிழக்கு கப்பல் தளங்களில் பணியாற்றியுள்ளாா். மேலும் ‘ஐஎன்எஸ் வினாஷ்’ போா்க் கப்பலின் கமாண்டா் உள்பட கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் அவா் பணியாற்றியுள்ளாா்.

அமெரிக்கா மற்றும் கோவாவில் உள்ள கடற்படை கல்லூரியிலும் அவா் பயிற்சி பெற்றுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com