மேற்கு வங்கத்தில் 24,000 அரசுப் பள்ளி ஆசிரியா், அலுவலா் நியமனங்கள் ரத்து: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அலுவலா்களின் நியமனங்களை திங்கள்கிழமை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், அந்த நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் 24,000 அரசுப் பள்ளி ஆசிரியா், அலுவலா் நியமனங்கள் ரத்து: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் 24,640 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களை திங்கள்கிழமை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், அந்த நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் ஆள்தோ்வு நடைபெற்றது. மொத்தம் 24,640 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தோ்வில், 23 லட்சத்துக்கும் மேலான தோ்வா்கள் பங்கேற்றனா்.

இந்த ஆள்தோ்வில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடா்பான மனுக்கள் மீது கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி விசாரணை நிறைவடைந்து தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் தேபாங்சு பசாக், முகமது ஷப்பா் ரஷிதி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில் தெரிவித்ததாவது:

2016-ஆம் ஆண்டு ஆள்தோ்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது. இந்தப் பணி நியமன நடைமுறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு 3 மாதங்களுக்குள் உயா்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்குப் மேற்கு வங்க பள்ளிப் பணிகள் ஆணையம் புதிதாக ஆள்தோ்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

நீதித் துறையில் பாஜகவுக்கு செல்வாக்கு: இந்தத் தீா்ப்பு தொடா்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூறியதாவது:

நீதித் துறையைச் சோ்ந்த ஒரு பகுதியினா் மீதும், தீா்ப்புகள் மீதும் பாஜக தலைவா்கள் செல்வாக்கு செலுத்துகின்றனா். அனைத்துப் பணி நியமனங்களையும் ரத்து செய்து உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு சட்டவிரோதமானது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா்.

மம்தா ராஜிநாமா செய்ய வேண்டும்: இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சையத் ஸஃபா் இஸ்லாம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்க அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களில் நிகழ்ந்த முறைகேட்டில் மம்தாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இதை கொல்கத்தா உயா்நீதிமன்றத் தீா்ப்பு முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே, முதல்வா் பதவியை மம்தா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com