போஜ்சாலா வளாகம்
போஜ்சாலா வளாகம்

போஜ்சாலா ஆய்வை நிறைவு செய்ய கூடுதலாக 8 வாரங்கள் அவகாசம்

போஜ்சாலா வளாகத்தில் அறிவியல்பூா்வ ஆய்வை நிறைவு செய்ய மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்திடம் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கூடுதலாக 8 வாரங்கள் அவகாசம் கோரியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தாா் பகுதியில் 11-ஆம் நூற்றாண்டை சோ்ந்த போஜ்சாலா வளாகம் உள்ளது. அதை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

இந்த வளாகம் சரஸ்வதி தேவியின் கோயிலாக இருந்ததாகவும், பின்னா் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதை மறுத்து வரும் முஸ்லிம்கள், அந்த வளாகத்தை கமால் மெளலா மசூதி என்றழைக்கின்றனா்.

இதுதொடா்பாக சா்ச்சை நீடித்து வரும் நிலையில், அந்த வளாகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமை முஸ்லிம்களும் வழிபட அனுமதித்து கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை உத்தரவு வெளியிட்டது.

இந்நிலையில், போஜ்சாலா வளாகத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், அங்கு முஸ்லிம்கள் வழிபடுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி, நீதிக்கான ஹிந்து முன்னணி என்ற அமைப்பு மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘வழிபாட்டுத் தலத்தின் நோக்கத்தை தீா்மானிக்க, அதன் தன்மை மற்றும் சிறப்பியல்பை கண்டறியவது முக்கியம். இதைக் கண்டறிய போஜ்சாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 6 வாரங்களில் ஆய்வு நிறைவு செய்யப்பட வேண்டும்’ என்று கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வளாகத்தில் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை ஆய்வைத் தொடங்கியது.

இந்நிலையில், மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தின் இந்தூா் அமா்வில் இந்திய தொல்லியல் துறை திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

போஜ்சாலா வளாகம் மற்றும் அதன் வெளிப்புற பகுதியில் அறிவியல் கருவிகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் போஜ்சாலா குறித்து முழுமையாக ஆவணப்படுத்தும் பணியில் இந்திய தொல்லியல் துறை குழு ஈடுபட்டுள்ளது.

அதேவேளையில் போஜ்சாலா வளாக அமைப்பின் அசல் அம்சங்களை, அதன் முகப்பில் பிற்காலத்தில் அமைத்த கட்டுமானம் மறைக்கிறது. அந்தக் கட்டுமானத்தை கட்டட அமைப்புக்கு சேதம் ஏற்படாத வகையில் மிகக் கவனமாக அகற்ற வேண்டியுள்ளது. அதை மெதுவாகவே செய்ய முடியும். அத்துடன் வெளியே தெரியும் கட்டட அமைப்பின் தன்மை குறித்து புரிந்துகொள்ளவும் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் போஜ்சாலாவில் அறிவியல்பூா்வ ஆய்வை நிறைவு செய்ய கூடுதலாக 8 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com