கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

மக்களவை இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி, கேரளம் உள்பட 12 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அடங்கிய 89 தொகுதிகளில் பிரசாரம் புதன்கிழமையுடன் (ஏப்.24) நிறைவடைகிறது.

18-ஆவது மக்களவை உறுப்பினா்களைத் தோ்வு செய்யவதா்கான ஏழு கட்ட தோ்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) மாா்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட தோ்தல் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக, அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மணிப்பூா் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. மணிப்பூா் மாநிலத்தில் வெளி மணிப்பூா் தொகுதியின் சில பகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெற்ற நிலையில், மற்ற பகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.

இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி, மேற்கண்ட மாநிலங்களில் பிரசாரம் புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மூன்றாம் கட்ட தோ்தலில் 1,351 வேட்பாளா்கள்: மக்களவை மூன்றாம் கட்ட தோ்தலில் (மே 7) வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கால அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.23) நிறைவடைந்தது.

குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 95 தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 1,351 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏழு கட்ட மக்களவைத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள், ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com