கோப்புப்படம்
கோப்புப்படம்

மணிப்பூா்: 2 கிராமங்களில் துப்பாக்கிச் சண்டை

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் இரு கிராமங்களில் இரு சமூகத்தினா் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இச்சம்பவங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இரு சமூகத்தினரும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனா். வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்நிலையில், குகி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டப் பகுதிகளில் இருந்து மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் மேற்கு இம்பால் மாவட்டத்தின் இரு கிராமங்களுக்கு ஆயுதங்களுடன் வந்த குழுக்கள், எதிா் சமூக குழுவினரை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இச்சண்டையில் அதிநவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு கிராமங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் படையினா் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com