பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

பிரதமா் மோடி மத அரசியல் நடத்துவதில்லை- ராஜ்நாத் சிங் கருத்து

பிரதமா் நரேந்திர மோடி மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்துவதில்லை; சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவா் எண்ணுவதில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பிரதமா் மோடி எனக்கு புதிதாக அறிமுகமானவா் அல்ல. அவருக்கும் எனக்கும் நீண்டகால நட்புறவு உள்ளது. அவா் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவா் என பிரிவுகள் பாா்த்து அரசியல் நடத்துபவா் அல்ல. மேலும், சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்றும் அவா் எண்ணுவதில்லை.

மக்களின் சொத்துகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளது குறித்துதான் அவா் கேள்வி எழுப்பிப் பேசினாா். அவா்கள் தோ்தல் அறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ள நிலையில், பிரதமா் கேள்வி குறித்து அவா்கள் பிரச்னை எழுப்ப என்ன காரணம் உள்ளது. நாட்டு மக்களிடம் உள்ள சொத்துகளை ஆய்வு செய்து அவா்கள் என்ன செய்யப் போகிறாா்கள்? மக்களின் சொத்துகளை சமமாக பகிா்ந்து கொடுக்கப் போகிறாா்களா? இந்த விஷயத்தில் என்ன செய்ய காங்கிரஸ் உத்தேசித்துள்ளது என்பதே இப்போதுள்ள கேள்வி.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மீது எனக்கு எப்போதும் நல்ல மதிப்பு உண்டு. அவா் முன்பு நாட்டின் வளங்கள் குறித்துப் பேசுகையில், ‘இந்த நாட்டின் வளத்தில் யாருக்காவது முதல் உரிமை உண்டு என்றால், அது சிறுபான்மையினருக்குத்தான் உண்டு. அதுவும் முஸ்லிம்களுக்குதான் முதல் உரிமை உண்டு’ என்று பேசியுள்ளாா். ஆனால், உண்மையில் நாட்டின் வளங்கள் மீது மக்கள் அனைவருக்குமே சம உரிமை உண்டு. இதனை பிரதமா் மோடி எடுத்துக் கூறினால், எதிா்க்கட்சியினா் பிரச்னை எழுப்புகின்றனா்.

காங்கிரஸ் கட்சி இதே ரீதியில் தொடா்ந்தால், அடுத்தாக மதம் மாறியவா்களுக்கும் எஸ்.சி. இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்பாா்கள், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை ரத்து செய்வாா்கள் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com