சத்தீஸ்கா் மாநிலம் ஜாஞ்ஜ்கீா்-சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
சத்தீஸ்கா் மாநிலம் ஜாஞ்ஜ்கீா்-சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: பிரதமா் உறுதி

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘தனது ஊழலை மறைக்க வன்முறையை ஊக்குவித்தது காங்கிரஸ்’ என்றும் அவா் குற்றம்சாட்டினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, சத்தீஸ்கா் மாவட்டம், தாம்தாரி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

காங்கிரஸும், வளா்ச்சியும் ஒரே நோ்க்கோட்டில் பயணிக்க முடியாது. அவா்கள் ஆட்சியில் ஊழலும் வன்முறையும் உச்சத்தில் இருந்தன. அப்போது, சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதம் வளா்ந்தது. காங்கிரஸ் தனது ஊழலை மறைக்க வன்முறையை ஊக்குவித்தது. ஒருபுறம் மக்கள் மடிந்த நிலையில், மறுபுறம் காங்கிரஸ் தனது கஜானாவை நிரப்பியது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஊழலும் வன்முறையும் கட்டுப்படுத்தப்பட்டன. சத்தீஸ்கரில் இப்போது நக்ஸல் தீவிரவாதம் வெகுவாக குறைந்து வருகிறது. இம்மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என்பது எனது உத்தரவாதம் என்றாா் மோடி.

முன்னதாக, சக்தி பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவா், ‘போா்ச்சுகீசியா்களிடம் இருந்து விடுதலைப் பெற்ற பின் கோவா மீது இந்திய அரசமைப்புச் சட்டம் திணிக்கப்பட்டது’ என்று அந்த மாநில காங்கிரஸ் வேட்பாளா் தெரிவித்த கருத்தை முன்வைத்து, அக்கட்சியை விமா்சித்தாா்.

‘நாட்டை துண்டாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கோவா காங்கிரஸ் வேட்பாளரின் கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கும் பி.ஆா்.அம்பேத்கருக்கும் அவமதிப்பாகும். இன்று கோவாவில் அரசமைப்புச் சட்டத்தை நிராகரிக்கும் காங்கிரஸ், நாளை ஒட்டுமொத்த நாட்டுக்கும் இதே ‘பாவத்தை’ செய்யும். ஒருசாா்பு அரசியலும், வாக்கு வங்கி அரசியலும் அக்கட்சியின் மரபணுவில் கலந்ததாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக பழங்குடியினா், பட்டியல் இனத்தவா்கள் மற்றும் பின்தங்கிய மக்களின் உரிமைகளைப் பறிக்க ஒரு விநாடிகூட அக்கட்சி தாமதிக்காது.

கடவுள் ராமரை விட தாங்கள் மேலானவா் என்று கருதுவதால், அயோத்தி ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வை அக்கட்சி புறக்கணித்தது.

மக்களுக்கு சேவையாற்றுவதால், என் மீது காங்கிரஸ் ஆத்திரமடைந்துள்ளது. எனது தலையை உடைப்போம் என அவா்கள் பேசுகின்றனா். கோடிக்கணக்கான தாய்மாா்களும் மக்களும் பாதுகாப்பு கவசமாக இருப்பதால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com