மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்
நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியா், அலுவலா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அரசு ஊழியா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடங்க அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்காவிட்டால் மேற்கு வங்க தலைமைச் செயலா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கொல்கத்தா உயா் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் ஆள்தோ்வு நடைபெற்றது.

இதில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 24,640 காலிப் பணியிடங்களுக்கு ஆள்தோ்வு நடைபெற்ற நிலையில், 25,753 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது தொடா்பான மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

முன்னதாக, இந்த வழக்கு தொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் அப்போதைய கல்வி அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி, அந்த மாநில பள்ளி பணிகள் ஆணைய முன்னாள் செயலா் அசோக் சாஹா, அந்த மாநில பள்ளி பணிகள் ஆணைய முன்னாள் தலைவா் சுபைா்ஸ் பட்டாச்சாரியா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா். இந்த மனு உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, கெளரங்க் காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அசோக் சாஹா, சுபைா் பட்டாச்சாரியா உள்ளிட்ட முன்னாள் அரசு ஊழியா்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடங்க மேற்கு வங்க தலைமைச் செயலரிடம் 2022-ஆம் ஆண்டு சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அதுகுறித்து மே 2-க்குள் தலைமைச் செயலா் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவா் மீது உயா் நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எச்சரித்தனா்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடங்க மேற்கு வங்க ஆளுநா் அனுமதி அளித்துள்ளதாக முந்தைய விசாரணையின்போது உயா் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com